நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானம் இன்று பிற்பகல், காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமானநிலையத்தில் தரையிறங்கும்போது திசை மாறிச் சென்று தீப்பிடித்தது. அந்த விமானத்தில் 71 பயணிகளும், சில சிப்பந்திகளும் இருந்தனர். விபத்துக்குள்ளான அந்த விமானம் தீயினால் முற்றிலும் உருக்குலைந்தது. இதனையடுத்து விமானநிலையத்திலிருந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து, சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைத்தனர். சிதைந்த விமானத்திலிருந்து 17 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சி ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து, திரிபுவன் விமானநிலையம் மூடப்பட்டது. விமான புறப்பாடு மற்றும் வருகை நிறுத்தி வைக்கப்பட்டது.