அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்து 46 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன
அமெரிக்காவின் சான் ஆன்டோனியோவில் சுமார் 100 அகதிகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 46 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய 4 சிறுவர்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரின் தெற்குப் புறநகரில் உள்ள தொலைதூரப் பகுதியில் ரயில் பாதைகளுக்கு அடுத்ததாக கண்டெய்னர் லாரி கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது அகதிகள் தப்பிச் செல்லும் முயற்சியாகத் தோன்றுகிறது என்று சான் அன்டோனியோ தீயணைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ எல்லையில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ளது சான் அன்டோனியோ நகரம். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அகதிகளுக்குதான் இந்த துயரச் சம்பவம் நேர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று (திங்கள்கிழமை) வெப்பநிலை அதிக ஈரப்பதத்துடன் 39.4 டிகிரி செல்சியஸ் ஆக சரிந்தது உயிரிழப்புகளுக்கு காரணமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் , அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கொள்கைகள் மீது மரணங்களுக்கான பழியை சுமத்தியுள்ளார். “அவை அவரது கொடிய திறந்த எல்லைக் கொள்கைகளின் விளைவாகும்” என்று பதிவிட்டுள்ளார்.