இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தனது கண்காணிப்புக் குழுக்களை அமர்த்தி தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 28 ஆவது மீளாய்வு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு ஜெனிவா சென்றுள்ளது.
இதனிடையே, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசு சார்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவில், போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது, தமிழ் போர் கைதிகள் சிறையில் உள்ளது, முகாம்களில் தமிழக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது, தமிழர்களின் நிலங்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமிப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தமிர் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் இலங்கை ராணுவத்தின் முகாம்களை மூட வேண்டும், இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். தமிழர்களுக்கு அவர்களுடைய நிலங்களை திருப்பி கொடுக்க வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் குழுவை அமர்த்தி தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன. இத்தகவல்கள் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்திரக்குமாரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.