அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் நிறைவடைந்தது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினர். புதிய அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ளார். இன்று அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ளார். அவருடன் துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருக்கும் கமலா ஹாரிஸும் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து பிரியா விடை பெற்றுச் சென்றார். “அதிபரின் ஆலோசகராக நான் பணியாற்றியது என வாழ்நாளின் சிறந்த தருணம். அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக நாங்கள் செய்துள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன். நான் அமெரிக்க குடும்பங்களுக்காக போராட வாஷிங்டனுக்கு வந்தேன், நான் அதைச் செய்தேன் என்று உணர்கிறேன்.
நேர்மறையான வழியில் அமெரிக்கா பயணிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த நான்கு ஆண்டுகள் நல்லதொரு பயணமாக அமைந்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும், செலுத்திய ஆதரவிற்கும் நன்றி. அதிபராக தேர்வாகியுள்ள பைடனுக்கு கடவுள் மன உறுதியை கொடுப்பார். அமெரிக்க குடிமக்களாகிய நாம் பைடனின் நிர்வாகம் வெற்றி பெற வாழ்த்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.