அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர் சில்வினா லூனா. இவர், பிரபல நடிகையும் மாடல் அழகியுமாவார். தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை செய்து கொண்டார். இதன்காரணமாக அவருக்குச் சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கி தொடர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். லூனாவின் மரணத்தை அவரது வழக்கறிஞர் பெர்னாண்டோ பர்லாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். லூனாவின் மரணம் குறித்து அவரது நண்பரும் நடிகருமான குஸ்டாவோ கான்டி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ”நாங்கள் எப்போதும் உன்னை நேசிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
சில்வினா லூனாவின் மரணம், அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சில்வினா, கடந்த 2011ஆம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இதற்காக ஒப்பனை அறுவைசிகிச்சை நிபுணர் அனிபால் லோடோக்கி என்பவரை அவர் அணுகியுள்ளார்.
அந்த அறுவைசிகிச்சையின்போது சில்வினாவிற்கு அர்ஜென்டினா நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட மருந்து ஒன்றை அவர் செலுத்தியதாகவும், அதனாலேயே அவர் பாதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்குமுன் மருத்துவர் அனிபால் லோடோக்கியிடம், அறுவைச்சிகிச்சை செய்துகொண்டு இறந்துபோன நோயாளி ஒருவரும் மரணிப்பதற்கு முன் இதே குற்றச்சாட்டை முன்வைத்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
பிளாஸ்டிக் அறுவைசிகிச்சையின்போதோ அல்லது அதற்குப் பிறகோ மக்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுபோல், இதுதொடர்பான இறப்புகளும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பிரபல ஒன்லி ஃபேன்ஸ் மாடலான 34 வயது நிறைந்த கிறிஸ்டினா ஆஷ்டேன் கோர்கானி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்குப் பிறகு மாரடைப்பால் இறந்தார். அதுபோல் கடந்த மே மாதம் சீரியல் நடிகரான சேத்தனா ராஜ், பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபிறகு மாரடைப்பால் இறந்ததாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.