பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரீன் இந்த வாரம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனை அவர் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பதில் என்ன பரபரப்பு என்ற கேள்வி எழலாம். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு ஜெசிந்தா ஆர்டென் கொடுத்த பதிலும்தான் காரணமாக இருக்கிறது. அதன்படி புதன்கிழமை (நவ.,30) ஆக்லாந்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
அப்போது, “நீங்கள் இருவரும் ஒரே வயதை கொண்டிருப்பதால்தான் சந்திக்கிறீர்களா? பல பேர் ஆச்சர்யப்படுகிறார்கள்” என நியூஸ்டாக் ZB நிரூபர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேபோல, இருவரும் ஒருவருக்கொருவர் வழிகாட்டுகிறார்களா? இளம் பெண் அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதைத் தவிர்க்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறதா? பார்ட்டி பிரதமர் என ஊடகங்கள் கூறுவதால் சன்னா மரீன் கவலைப்படுகிறாரா? என்றும் நியூசிலாந்து நிரூபர்கள் கேள்விகளை அடுக்கியிருக்கிறார்கள்.
இதைக் கேட்டு சற்று கடுப்பான நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், தக்க பதிலடியும் கொடுத்திருக்கிறார். அதில், “என்னுடைய முதல் கேள்வி என்னவென்றால், பாரக் ஒபாமாவும் ஜான் கெவும் (முன்னாள் நியூசி பிரதமர்) சந்தித்த போது ஒரே வயது இருப்பதால்தான் சந்தித்தீர்களா என எவரேனும் கேள்வி எழுப்பினார்களா?” எனக் பதில் கேள்வி கேட்டு திணறடித்திருக்கிறார் ஜெசிந்தா.
தொடர்ந்து பேசிய ஜெசிந்தா ஆர்டென், “அரசியலில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே வேளையில், இரண்டு பெண்கள் சந்திப்பதால் அவர்கள் தங்களது பாலினம் சார்ந்துதான் பேசுவார்கள் என்பது கிடையாது” என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஜெசிந்தாவை அடுத்து பேசிய பின்லாந்து பிரதமர் சன்னா மரீன், “நானும் ஆர்டெனும் பெண் உரிமைக்கு ஆதரவு கொடுப்பது பற்றி பேசினோம். குறிப்பாக ஈரானில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் குறித்து ஆலோசித்தோம். அதேவேளையில் பின்லாந்து - நியூசிலாந்து இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்தும் பேசினோம்.
பார்ட்டி பிரதமர் எனக் கூறுவது பற்றியெல்லாம் கவலைக்கொள்ளவில்லை. தற்போது உலகளாவிய தொற்றுநோய் உள்ளது. ஐரோப்பிய போர், மின்சார, பொருளாதார நெருக்கடி என பல விஷயங்கள் குறித்த விவாதங்கள் உள்ளது. இருப்பினும் ஊடகங்களுக்கு பேசவும், எழுதவும் சுதந்திரமும் இருகிறது.” எனக் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, நியூசி-பின்லாந்து பிரதமர்களுக்கு ஒரே வயது இருப்பதால்தான் சந்தித்தார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதனிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கும், பின்லாந்து பிரதமர் சன்னா மரீனுக்கும் முறையே 42, 37 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.