மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 124 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 61 பில்லியன் டாலராக சுருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனில் மீதமுள்ள 63 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு என்ன ஆனது? ஏன் இந்த சரிவு?
உலகின் டாப் பணக்காரர்கள் பலரின் சொத்து மதிப்பு, பல்வேறு நாடுகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் அவர்களுடைய நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பை பொறுத்து ஏற்ற இறக்கம் காணும். அதே போலத்தான் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்தும் ஃபேஸ்புக் நிறுவன பங்குகளை சார்ந்து அதிகரிக்கிறது குறைகிறது. மெட்டா நிறுவனத்தில் மார்க் சக்கர்பெர்க் சுமார் 12.5 சதவீத பங்குகளை வைத்திருப்பதாக யு.எஸ்.ஏ டுடே என்கிற பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் டாப் 10 பணக்காரராக 2015 ஆம் ஆண்டில் நுழைந்த மார்க் சககர்பெர்க், இந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாத காலத்தில்தான் டாப் 10 இடங்களில் இருந்து கீழே சரிந்துள்ளார்.
கடந்த 2021 செப்டம்பர் 2-ஆம் தேதி மெடா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை தன் வாழ்நாள் உச்சமாக 384.33 அமெரிக்க டாலரைத் தொட்டு வர்த்தகமானது. அப்போது மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 124 பில்லியன் டாலரைத் தொட்டது. ஆனால் தற்போதைய (ஜூன் 17 வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 61 பில்லியன் டாலராக சுருங்கி உள்ளதாக ப்ளூம்பெர்க் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 63 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு என்ன ஆனது? ஏன் இந்த சரிவு?
பெரு வீழ்ச்சி:
கடந்த 2022 பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் மெட்டா நிறுவனத்தின் அடுத்த காலாண்டு வருவாய் எதிர்பார்ப்பதை விட குறைவாக இருக்கும் என ஒரு செய்தி வெளியானது. அன்று ஒரே நாளில் மெட்டா நிறுவன பங்குகள் சுமார் 26 சதவீதம் விலை சரிந்தது. சுமார் 325 டாலருக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டிருந்த மெட்டா நிறுவன பங்குகளின் விலை ஒரே நாளில் 240 டாலரைத் தொட்டு வர்த்தகமானது.
அதுபோக கொரோனா வைரஸ் பெருந்தொற்று, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள், பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பணவீக்க பிரச்சனை... எனப் பல காரணிகளால் விளம்பரம் கொடுக்கும் நிறுவனங்கள், தங்களின் விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் பட்ஜெட்டை கணிசமாக குறைந்திருப்பதாக கூறியது மெட்டா.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி மெட்டா நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 97 சதவீத வருவாய் விளம்பரங்களில் இருந்து மட்டுமே வருவதாக ஸ்டாடிஸ்டா நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன. விளம்பரதாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் சரிந்தது மெட்டா நிறுவனத்தை நேரடியாக பாதித்தது.
2021ஆம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் ஏடிடி என்றழைக்கப்படும் App tracking transparency வசதியை தன் ஐ.ஓ.எஸ் 14.5 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தியதாக சி.என்.பி.சி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகத்தில் பயன்படுத்தப்படும் நவீன ஐபோன்களில், கிட்டத்தட்ட 72 சதவீத ஐபோன்களில் இந்த ஏடிடி வசதி பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆப்பிள் நிறுவனமே குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோனை பயன்படுத்தும் ஒரு பயனர், ஒரு குறிப்பிட்ட செயலியை பயன்படுத்தத் தொடங்கும்போது 'இந்த செயலி உங்களை பின் தொடரலாமா' என்று கேட்கும். ஐபோன் பயனர் அதற்கு 'நோ' என மறுப்பு தெரிவித்து விட்டால், அந்த செயலியை மேம்படுத்திய நிறுவனத்தாலோ மனிதர்களாலோ அந்த பயனரைப் பின் தொடர முடியாது. சுருக்கமாக ஐ டி எஃப் ஏ என்றழைக்கப்படும் Identifier For Advertisers என்கிற விவரங்கள் எதுவுமே விளம்பரதாரர்களுக்கு கிடைக்காது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏடிடி சேவையினால் துல்லியமாக ஒரு விளம்பரத்தை விளம்பரப்படுத்த முடியாது என்பதுதான் மெட்டா நிறுவனத்தின் பிரச்சனை. ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த ஏடிடி சேவையை 62 சதவீத ஐபோன் பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக விளம்பரங்களை கண்காணித்து மதிப்பிடும் நிறுவனமான ஆப்ஸ் ஃபிளயர், ஓர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
விளம்பர வருமானத்தை மட்டுமே மிகப்பெரிய அளவில் நம்பி இருக்கும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஏடிடி சேவையினால் 2022ஆம் ஆண்டில் மெட்டா நிறுவனத்திற்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்படலாம் என அந்நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி டேவிட் வெனர் (David Wehner) பல செய்தி நிறுவனங்களிடம் கூறியுள்ளார்.
பின்தொடரும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்சனை:
ஃபேஸ்புக் நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்கிற நிறுவனத்தின் வழியாக ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பயனர்களின் தரவுகளை, அவர்களின் அனுமதியின்றி திரட்டி, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக ஒரு பெரும் பிரச்சனை எழுந்தது. அப்பிரச்னை தொடங்கியதிலிருந்து, அதுநாள் வரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது வைத்திருந்த மதிப்பு மற்றும் நம்பகத்தன்மையை பலரும் இழக்கத் தொடங்கினர்.
அவ்வளவு ஏன்... 2020ஆம் ஆண்டில், இந்தியாவுக்கான ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதன்மைக் கொள்கை அதிகாரியாக இருந்த 'அன்கி தாஸ்' என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் சில தலைவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக ஒரு பிரச்சனை எழுந்தது. அடுத்த சில மாதங்களில் அவர் தன் பதவியிலிருந்து விலகினார்.
2022ஆம் ஆண்டு, சில மாதங்களுக்கு முன்பு கூட, இந்தியாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு விளம்பரத்தை ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரப்படுத்த குறைந்த கட்டணமும், அதே போன்ற விளம்பரத்தை, அதே எண்ணிக்கையிலான மக்களுக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்த, இந்திய தேசிய காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகளுக்கு அதிக விளம்பர கட்டணமும் ஃபேஸ்புக்கால் வசூலிக்கப்படுவதாக, முக்கிய சர்வதேச ஊடகங்களில் ஒன்றான அல்ஜசீராவில் ஒரு நீண்ட நெடிய கட்டுரை வெளியானது.
இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் ஃபேஸ்புக் நிறுவனம் எப்பாடுபட்டாவது தன் விளம்பர வருமானத்தை காப்பாற்றிக்கொள்ள போராடுவதை அப்பட்டமாக படம் போட்டு காட்டியது. இவை அனைத்தும் தற்போது மெடா நிறுவனத்தை கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கின்றன. மெட்டா நிறுவனத்தின் பங்குகளின் விலை கடந்த பிப்ரவரி முதல் இன்று வரை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. சில மாதங்களுக்கு முன் 384 டாலர் தொட்டு வர்த்தகமாகி கொண்டிருந்த மெடா நிறுவன பங்குகளின் விலை, நேற்று ஜூன் 17ஆம் தேதி மாலை சுமார் 164 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.
எதிர்காலம் என்ன?
தொடக்கத்தில் ஒரு சாதாரண சமூக வலைத்தளமாக சக்கை போடு போட்ட ஃபேஸ்புக், இன்று மெடாவெர்ஸ், ஆக்குமெண்டெட் ரியாலிட்டி, வெர்ச்சுவல் ரியாலிட்டி போன்றவைகள் தான் தன் எதிர்காலம் என்று கருதுகிறது.
இந்த விஷயங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்குச் சென்றடையும்? இந்த தொழில்நுட்ப வசதிகளை எல்லாம் ஃபேஸ்புக் நிறுவனம் மட்டும்தான் செய்ய முடியுமா? மற்ற நிறுவனங்களும் எளிதில் இதை பார்த்து தங்களுக்கென ஒரு புதிய தளத்தை தொடங்கிவிட்டால் மெடா நிறுவனத்தால் தாக்குபிடிக்க முடியுமா? என வணிக உலகில் பலரும் பல கோணங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.
மெட்டா நிறுவனம் மீண்டும் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை நிலைநிறுத்தி, எதிர்கால வியாபாரத்தையும் உறுதி செய்தால் மார்க் சக்கர்பெர்க் மீண்டும் உலகின் டாப் 10 பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெறலாம். ஒருவேளை இந்த அக்னி பரீட்சையில் அவர் தோற்றால், உலக பில்லியனர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து சரிவைச் சுவைக்க வேண்டிவரும்.
- கெளதம்