அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமரா திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தது. இதன் காரணமாக புதிய சட்டங்களை இயற்றுவதில் ஆளும் அதிபர் தரப்பு கட்சிக்கு சிக்கல் இருந்தது. இதையடுத்து, பதவியேற்ற அநுர குமரா திசநாயக, அடுத்த நாளே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அது நேற்று (நவ.14) நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், இன்று காலைமுதல் வாக்குகள் எண்ணப்பட்டதில், தொடர்ந்து ஆளும் தேசிய மக்கள் சக்தி அதிக மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அதிபர் அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, முன்னாள் இடைக்கால அதிபர் ரணிலின் ஆதரவு பெற்ற புதிய சனநாயக முன்னணி, ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட சிங்களக் கட்சிகளும், எஸ்.ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் போட்டியிட்ட நிலையில், அதிபர் அநுர குமாராவின் கட்சி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. மொத்தத்தில், 22 தேர்தல் மாவட்டங்களிலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சையைச் சேர்ந்த 690 குழுக்கள் போட்டியிட்டன. அந்தக் குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 8,352 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த 226 உறுப்பினர்களில், (196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள். 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்) பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ 113 இடங்களை பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், தேசிய மக்கள் சக்தி, இந்தத் தேர்தல் முடிவுகளின்படி 141 இடங்களைத் தன்வசப்படுத்தியுள்ளது.
மேலும், கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தேர்தல் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மக்கள் சக்திக்கு, 29 தேசியப் பட்டியல் இடங்களில் 18 இடங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, இலங்கை நாடாளுமன்றத்தில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி, 159 இடங்களைப் பிடித்துள்ளது. அதாவது அந்தக் கட்சி தற்போது சூப்பர் மெஜாரிட்டியைப் பெற்றுள்ளது. 226 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (150+) கிடைத்தால் அது சூப்பர் மெஜாரிட்டியாக மாறும்.
தேசிய மக்கள் கட்சிக்கு (6,863,186 - 159 ஆசனங்கள், 61.56%) அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி (1,968,716 வாக்குகள் - 40 ஆசனங்கள், 17.66%) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (257,813 வாக்குகள் - 8 ஆசனங்கள், 2.31%) பெற்றுள்ளது. 4வது இடத்தை, புதிய ஜனநாயக முன்னணி (5,00,835 வாக்குகள் - 5 ஆசனங்கள், 4.49%) கட்சியும், 5வது இடத்தை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (3,50,429 வாக்குகள் - 3 ஆசனங்கள், 3.14%) கட்சியும் பெற்றுள்ளன.
குறிப்பாக, நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அதிபரின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 2019-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 225 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்று மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது அவரது கட்சி 128 இடங்களையும், தேசிய பட்டியல் மூலமாக 17 இடங்களையும் பெற்று, மொத்தம் 145 இடங்களைக் கைப்பற்றி அதிக மெஜாரிட்டியுடன் ஆட்சி புரிந்தது. இதை, தற்போதைய தேசிய மக்கள் சக்தி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை வரலாற்றில், தற்போது ஆளும் தேசிய மக்கள் சக்தி 141 இடங்களை வென்றதுடன், தேசியப் பட்டியல் மூலம் 18 இடங்களையும் கைப்பற்றியது. இதன்மூலம் மொத்த 159 இடங்களைப் பிடித்து வரலாற்றுச் சாதனை பிடித்துள்ளது. கடந்த 2020இல், இந்தக் கட்சி, 2 இடங்களில் வெற்றியும், 1 தேசியப் பட்டியல் இடத்தையும் பிடித்து மொத்தமே 3 இடங்களைப் பிடித்து 4வது இடத்தைத் தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அது அப்போதைய அரசுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சியாக வெடித்தது. அந்தச் சமயத்தில், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம், இலங்கையை விட்டு தப்பியோடினர். அதேசமயத்தில் மகிந்த ராஜபக்சே பிரதமராக இருந்தார். அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் விளைவு, தற்போது வரை அவரது குடும்பத்தினர் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து வருகின்றனர்.