இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசா, அநூர குமார திஸநாயகா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில் தற்போதைய நிலவரப்படி, அநுரா குமார திஸநாயகா முன்னிலை வகிக்கிறார். பிற்பகலுக்குள் இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறார், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திஸநாயக. அவர் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நல்லாட்சிக்கு உத்தரவாதம் அளித்த நிலையில், அவருக்கு மக்கள் தங்களது வாக்குகளை வழங்கியுள்ளதாக அவரது தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.
அதேவேளை திஸநாயகேவின் வாக்கு சதவிகிதம் 50 சதவிகிதத்திலிருந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக 15,68,525 (44.46%) வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளார், அவரை தொடர்ந்து இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 10,67,280 (30.25%) வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 5,55,209 (15.82%) வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
இறுதி சுற்று வரை திஸநாயக 50 சதவிகிதத்தை தொடவில்லை என்றால் 'Instant Run of method'முறைப்படி இரண்டாவது முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். இலங்கை தேர்தல் விதிப்படி ஒருவர் அதிபராக 50 சதவிகித வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுஒருபுறம் இருந்தாலும், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான அலி சப்ரி, திஸநாயகவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நீண்ட மற்றும் கடினமான பிரச்சாரத்திற்கு பிறகு தேர்தல் முடிவுகள் தற்போது தெளிவாக உள்ளன. மக்கள் தங்களது முடிவினை அறிவித்துள்ளனர். அநுரா குமாந திஸநாயகவிற்கான மக்களது விருப்பத்தினை நான் மதிக்கிறேன். ஜனநாயகத்தில் மக்களது விருப்பத்திற்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியமானது. நான் அதை தயக்கமின்றி செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.