இலங்கை அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 விழுக்காடுக்கு மேல் வாக்குகளை வாங்காத நிலையில் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடைசியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி கட்சியீன் அநுரா குமாரா திஸநாயக்கா 39.52 விழுக்காடு வாக்குகளை பெற்றிருந்தார்.
34.28 விழுக்காடு வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் இருந்தார். இலங்கை தேர்தல் விதிகளின்படி ஒருவர் அதிபராக தேர்வாக 50 விழுக்காடுக்கு மேல் வாக்குகளை பெறவேண்டும், முன்னணியில் உள்ள இருவரும் 50 விழுக்காடு வாக்குகளை பெறாததால் வாக்காளர்களின் இரண்டாவது விருப்பத் தேர்வுகளை எண்ணும் பணி தொடங்கியது. மொத்த வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த இரண்டாவது சுற்றில் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.
மாற்றுத் தேர்வு வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் ரத்னாயக்க கூறியிருந்தார். இந்நிலையில், விருப்ப வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னணியில் இருந்த திசநாயக, தற்போது அதிபராகி இருக்கிறார். நாளை அவர் பதவியேற்க உள்ளார்.
தன் வெற்றி குறித்து அநுரா எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சிப் பதிவொன்றை இட்டிருக்கிறார்.
அதில் அவர், “பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகி உள்ளது. இந்த சாதனை தனியொருவருடைய உழைப்பினால் வந்ததல்ல. உங்களைப் போன்ற நூறாயிரக்கணக்கானோரின் கூட்டு முயற்சிதான் இந்த வெற்றி. ஆம், உங்கள் அர்ப்பணிப்புதான் எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது.
இந்த வெற்றிக்காக தங்கள் வியர்வையையும், கண்ணீரையும், தங்கள் வாழ்க்கையையும் கூட அர்ப்பணித்த பலரின் தியாகத்தால் எங்கள் பயணம் செதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் தியாகங்கள் மறக்கப்படவில்லை. அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களின் செங்கோலை நாங்கள் ஏந்தி சுமந்து செல்வோம். நம்பிக்கையினாலும் எதிர்பார்ப்பினாலும் நிரம்பிய கோடிக்கணக்கான கண்கள் எம்மை முன்னோக்கித் தள்ளுகின்றன. அனைவரோடும் ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம்.
இந்த கனவை புதிய தொடக்கத்தில் மட்டுமே நனவாக்க முடியும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும். நாம் ஒன்றாக இணைந்து இந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்!”