இஸ்ரேல் - ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். காசா எல்லைப் பகுதியை குறிவைத்து ராக்கெட்கள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டு தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 7 ஆம் தேதி முதல் ஹமாஸ் அமைப்பினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்காக, இதுவரை 37 ஆயிரத்து 350 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இதுவரை 6 ஆயிரத்து 55 பேர் கொல்லப்பட்டதாகவும் 15 ஆயிரத்து 143 பேர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்களை சுட்டிக்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகள் திறந்திருந்தாலும் சிகிச்சை அளிக்க எந்த வசதிகளும் இல்லை எனவும் காசாவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இஸ்ரேல் - காசா இடையிலான போர் நிறுத்தத்திற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை என ஐநா பாதுகாப்பு சபையில் பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தின. போர் நிறுத்தம் கோரி கடந்த வாரம் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுவதை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே விவகாரத்தில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானமும் நிராகரிக்கப்பட்டிருந்தது. போர் நிறுத்தத்திற்கு ஐநாவால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதது தங்களுக்கு அதிருப்தி தருவதாக எகிப்து தெரிவித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்கா புதிதாக ஒரு வரைவு தீர்மானத்தை முன்வைத்துள்ளது. அதில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க வழி செய்வதுடன் சர்வதேச விதிகளுக்குட்பட்டு நாடுகள் தங்கள் தற்காப்பை உறுதி செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே பாலஸ்தீனியர்கள் 56 ஆண்டுகால ஆக்கிரமிப்பால் நலிவுற்றிருப்பதாகவும் ஹமாசின் தாக்குதல் ஒரு எதிர்வினைதான் என்ற ரீதியில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் கூறிய கருத்தால் இஸ்ரேல் கடும் கோபமடைந்துள்ளது. அன்டோனியோ குட்டரஸின் கருத்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளதாகவும் எனவே அவர் பதவி விலகவேண்டும் என்றும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.