அர்ஜென்டினாவில் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் வகையை சேர்ந்த ராட்சத பறக்கும் டிராகனின் புதைப்படிவத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் உள்ளிட்ட பல்வேறு வகையான ராட்சத உயிரினங்கள் வாழ்ந்துள்ளன. நிலத்தில் மட்டுமின்றி கடலிலும் இதுபோன்ற ராட்சத மீன்களும், பாலூட்டிகளும் வாழ்ந்ததாக அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நமக்கு தெரியவந்திருக்கிறது. விண்கல்கள் பூமியில் மோதியது; பூகம்பம், கடற்கோள், காட்டுத் தீ போன்ற பேரிடர்களால் இந்த வகை உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து போய்விட்டன. எனினும், இந்த உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சி உலகம் முழுவதும் இப்போது வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அர்ஜென்டினாவின் மென்டோஸா மாகாணத்தில் உள்ள ஆண்டெஸ் மலைப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய பறக்கும் உயிரினத்தின் புதைப்படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சுமார் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர்களின் காலத்தில் வாழ்ந்த இந்த உயிரினம் ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். 30 அடி நீளம் கொண்ட இந்த உயிரினம் வேட்டையாடி உண்பவை. மிகவும் ஆபத்தான உயிரினமாக இருந்த இதற்கு 'டிராகன் ஆஃப் டெத் ' என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். சீனாவில் கற்பனையாக உருவகப்படுத்தப்பட்ட டிராகனின் உருவ அமைப்பை இது ஒத்திருப்பதால் இந்த பெயரை ஆராய்ச்சியாளர்கள் சூட்டியுள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.