சிகரெட்டுக்கு  முடிவுரை: புகையிலை இல்லாத நாடாக மாற நியூசிலாந்து திட்டம்

சிகரெட்டுக்கு  முடிவுரை: புகையிலை இல்லாத நாடாக மாற நியூசிலாந்து திட்டம்
சிகரெட்டுக்கு  முடிவுரை: புகையிலை இல்லாத நாடாக மாற நியூசிலாந்து திட்டம்
Published on

2025-ஆம் ஆண்டுக்குள் புகையிலை, சிகரெட் பயன்பாடு இல்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்க, அந்நாட்டு அரசு செயல் திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டங்களின் மூலமாக சட்டப்பூர்வமான புகைபிடிக்கும் வயது படிப்படியாக அதிகரிக்கப்படும். 2004-க்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை வரை நீட்டிக்கப்படலாம்.  அந்த தலைமுறைக்கு புகைபிடிப்பது சட்டவிரோதமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் புகையிலை பொருட்களில் அனுமதிக்கப்பட்ட நிகோடினின் அளவைக் கணிசமாகக் குறைத்தல், வடிப்பான்களைத் தடை செய்தல், புகையிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்தல், புகையிலை மற்றும் சிகரெட்டுகளை விற்கக்கூடிய இடங்களை கட்டுப்படுத்துதல் ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்தின் இணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால் இந்த மாற்றங்களை அறிவித்தபின்பு, "ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,500 நியூசிலாந்து மக்கள் புகையிலையால் இறக்கின்றனர், 2025 ஆம் ஆண்டுக்குள் புகையிலை இல்லாத நாடாக நியூசிலாந்தை மாற்ற விரைவான செயல்திட்டத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். இதற்கு நமக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவைஎனத் தெரிவித்தார்.

நியூசிலாந்து மக்களிடையே புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். இந்நாட்டில் புற்றுநோயால் இறக்கும் நால்வரில் ஒருவர் புகையிலையால் உயிரிழக்கிறார். எனவே அதனை கட்டுப்படுத்தும் திட்டங்களை பல பொது சுகாதார அமைப்புகள் வரவேற்றுள்ளன. ஆனால் இந்தத் திட்டங்கள் மூலமாக சிறிய கடை உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும் எனவும், இந்த தடைமூலமாக கள்ளச்சந்தையில் புகையிலை விற்பனையாகும் எனவும், கடத்தலுக்கும் வழிவகுக்கும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com