Spicy One Chip சேலஞ்சால் ஏற்பட்ட விபரீதம்... அமெரிக்காவில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

சமூக வலைதளங்களில் பரவிய ஸ்பைசி சிப்ஸ் சாப்பிடும் போட்டியை தானும் முயற்சித்து, இறுதியில் உயிரிழந்துள்ளார் 14 வயது சிறுவனொருவர்.
Spicy One Chip challenge
Spicy One Chip challengeTwitter
Published on

இன்றைய இணைய உலகில் எல்லா சமூகவலைதளங்களும் எல்லா தரப்பினராலும் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகின்றது. அதிலும் குறிப்பாக உணவு தொடர்பான விஷயங்களை பார்ப்பதும் பகிர்வதும் பன்மடங்கு அதிகம். வீடியோக்களில், புகைப்படங்களில் பார்க்கும் உணவுகளின்மீது அதீத ஆவல் கொண்டு அதனை பலரும் சாப்பிட நினைப்பதுண்டு. இதைவிட ஒருபடி மேல் சென்றது, உணவு தொடர்பான சேலஞ்ச்கள். ‘நான் செய்கிறேன் நீயும் செய்’ என்பதை உணர்த்தும் இத்தகைய சேலஞ்ச்கள், பார்ப்பவரை எளிதில் தூண்டிவிடும்.

அப்படி அமெரிக்காவில் டிக்டாகின் மூலம் பிரபலமான ஸ்பைசி ஒன் - சிப் சேலஞ்சை சமூகவலைதளத்தில் பார்த்து, அதனால் தூண்டப்பட்டு அதை முயற்சித்துப்பார்த்த மாணவர் ஒருவர், எதிர்பாரா விதமாக மரணமடைந்துள்ளார். சமூக வலைதளமான டிக்டாக்-ல் சமீபத்தில் இந்த ஸ்பைசி சிப்ஸ் சேலஞ்ச் பிரபலமாகியுள்ளது. அதைக்கண்ட அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா என்னும் மாணவரொருவர், "ஒன் சிப் சேலஞ்ச்"-ல் என்ற ஸ்பைசி சிப்சை உண்ண வேண்டும் என்று நினைத்து சாப்பிட்டுள்ளார். அதனை முயற்சித்த சில மணிநேரத்திலேயே, கடும் வயிற்றுவலி ஏற்படவே உயிரிழந்துள்ளார் அவர்.

ஸ்பைசி ஒன் சிப் சேலஞ்ச்சால் உயிரிழந்த மாணவர்
ஸ்பைசி ஒன் சிப் சேலஞ்ச்சால் உயிரிழந்த மாணவர்

ஆனால் இதை சாப்பிட்டதுதான் மாணவனின் மரணத்திற்கான காரணமா, அல்லது வேறு ஏதும் காரணமா என்று முழுமையாக தெரியவரவில்லை. அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை.

இருப்பினும் இறந்த மாணவரின் தாய் கூறுகையில், “என் மகன் பள்ளியில் இருக்கும்போது சமூகவலைதளங்களில் அதிகமாக வலம்வரும் ஹாட்சிப்ஸ் சேலஞ்ஜை தானும் முயற்சிக்க விரும்பி, செய்திருக்கிறான். அதனை முயற்சி செய்த சிலமணி நேரத்தில் கடும் வயிற்றுவலி ஏற்படவே அவனது (வொர்செஸ்டரில் உள்ள டோஹெர்டி) பள்ளியிலிருந்து அவனை வீட்டிற்கு அழைத்துவந்தனர். இதன் பிறகு அவனது உடல் நிலை மோசமாகினது. நாங்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவனை அழைத்துச்சென்றோம். ஆனால் அதற்கும் என் மகன் உயிரிழந்துவிட்டான். அந்த சிப்ஸ் சாப்பிட்டதுதான் என் மகன் இறப்புக்கு காரணமென நான் நினைக்கிறேன்” என்றுள்ளார் வேதனையுடன்.

சிறுவனின் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணம் என்னவென்று அறிய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஸ்பைசி சிப்ஸ்
ஸ்பைசி சிப்ஸ்

இறந்த மாணவர் சிறந்த கூடைபந்து வீரரென சொல்லப்படுகிறது. இது குறித்து அப்பள்ளியின் கண்காணிப்பாளர் மொனாரெஸ், “ஹாரிஸ் வோலோபாவை இழந்ததை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தாய் மற்றும் கல்வியாளர் என்ற முறையில், இது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை” என்றுள்ளார்.

அவரது கூடைப்பந்து பயிற்சியாளர்களில் ஒருவரான டக்ளஸ் ஹில் என்பவர் ஊடகங்களில் கூறுகையில், ”எனது நட்சத்திர வீரர்களில் ஒருவர் இறந்துவிட்டதை அறிந்து திகைத்துப் போனேன். முதலில் விஷயம் அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் என் மாணவனின் பெயரைச் சொன்னபோது, ​​​​இது அவர்தானா என்று நான் நூறு முறை கேட்டேன். நம்பவேயில்லை” என்றுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, இந்த ஹாட் சிப்ஸ் நிறுவனம் தங்களது ஹாட் சிப்ஸை சாப்பிடுவது பல மருத்துவ பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமையும் என்று தனது வலைதளப்பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிப்ஸை பெரியவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும், இதனால் சுவாசிப்பதில் சிரமம், மயக்கம், நீடித்த குமட்டல் போன்றவை இருந்தால் மருத்துவரை நாடுங்கள் என்றும் தனது வலைதளப்பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது என்று நியூயார்க் போஸ்ட் பத்திரிகை நிறுவனம் தெரிவிக்கிறது.

குறிப்பு: சமூக வலைதளங்களை பார்த்து அனைத்தையும் முயற்சிக்க நினைப்பது சரியானது அல்ல.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com