ஈரானுக்கு அருகேயுள்ள நாடுகளில் எங்கெல்லாம் அமெரிக்கப் படை வீரர்கள் உள்ளனர்.
உலகிலேயே மிக பலம் வாய்ந்த பாதுகாப்பு படையை கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா. ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளை தாண்டி விண்வெளி படையையும் அண்மையில் அமெரிக்கா உருவாக்கியது. அமெரிக்க ராணுவத்தில் சுமார் 21 லட்சம் வீரர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் வீரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அமெரிக்கா 177 நாடுகளில் தனது வீரர்களை நிலைநிறுத்தியுள்ளது. சுமார் 800 இடங்களில் தனது ராணுவத் தளங்களை நிறுவியுள்ளது.
தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரானுக்கு அருகேயுள்ள நாடுகளில் எங்கெல்லாம் அமெரிக்கப் படை வீரர்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 14 ஆயிரம் வீரர்களை அமெரிக்கா குவித்து வைத்திருக்கிறது. குவைத் மற்றும் கத்தாரில் தலா 13 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். பஹ்ரைன் நாட்டில் 7 ஆயிரம் வீரர்களும், ஈராக்கில் 6 ஆயிரம் வீரர்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 ஆயிரம் வீரர்களும் பணியில் இருக்கின்றனர்.
சவுதி அரேபியா மற்றும் ஜோர்டனில் தலா 3 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ளனர். துருக்கியில் 2 ஆயிரத்து 500 பேரும், சிரியாவில் 800 பேரும், ஓமனில் 600 பேரும் இருக்கின்றனர். எனவே ஈரானை சுற்றி இருக்கும் நாடுகளில் மட்டும் 67 ஆயிரத்து 906 அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு தவிர ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் அமெரிக்க படையினர் பணியில் உள்ளனர்.