அமெரிக்கா சுட்டு வீழ்த்திய உளவுப் பலூனுக்குச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீனாவின் உளவு பலூன் ஒன்று பறப்பதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. அந்த பலூன் ரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மக்களின் நலன் கருதி இந்த உளவு பலூனைச் சுடவில்லை என்றும் அமெரிக்கா கூறியது. அதற்கு சீனா, “இது, உளவு பலூன் அல்ல; தனியார் வானிலை ஆய்வகத்தின் பலூன் எனப் பதிலளித்திருந்தது.
ஆனால் இந்த விளக்கத்தில் அமெரிக்கா சமாதானமடையவில்லை. அத்துடன், இந்தப் பலூன் விவகாரத்தால் அமெரிக்கா - சீனா இடையே மேலும் விரோதப் போக்கு அதிகரித்தது. மேலும் அமெரிக்க அதிபர் பைடனுக்கு சீன பலூன் பற்றி ராணுவம் தொடர்ந்து தகவல்களைக் கொடுத்து வந்தது. இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன், அரசு முறைப் பயணமாக சீனா செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்தப் பிரச்சினையால் அந்தப் பயணம் தற்போது ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அமெரிக்கா தெற்கு கரோலினா மாகாணத்தில் பறந்த சீனாவின் மற்றொரு உளவு பலூனை அமெரிக்க ராணுவம் இன்று சுட்டு வீழ்த்தியுள்ளது. நிலப்பரப்பின் மீது பறந்த பலூன் அட்லாண்டிக் கடல்பரப்பின் மேலே செல்லும்வரை காத்திருந்து அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் பைடன், "பலூனை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதைச் செய்த எங்கள் விமானிகளை நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவத்தால் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பலூனைச் சுட்டு வீழ்த்தியது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், ”இது, சீனாவின் உளவு பலூனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சட்டப்பூர்வமான நடவடிக்கை. நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஆனால் இதற்கு சீனா கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை, “இது மிகவும் தவறான நடவடிக்கை. அமெரிக்கா இந்த விவகாரத்தில் சர்வதேச விதிகளை மீறிவிட்டது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.
”அதேநேரத்தில், அமெரிக்க எல்லையில் இதுபோன்ற பலூன்கள் பறப்பது இது, முதல்முறை அல்ல. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது மூன்று பலூன்கள் இதுபோல் பறக்கவிடப்பட்டன. தற்போது பைடன் ஆட்சியில், இரண்டு பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதில் நேற்று பறந்த பலூன்தான் நீண்டநேரம் பறந்துள்ளது. கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் ஐரோப்பா உட்பட ஐந்து கண்டங்களில் சீனா இதுபோன்று உளவு பலூன்களை அனுப்பியுள்ளது” என அமெரிக்க மூத்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக செயற்கைக்கோள்கள் மூலம்தான் உளவு பார்க்கப்படும். ஆனால், அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, தற்போது பலூன்கள் கொண்டு உளவு பார்க்கப்படுவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ஜெ.பிரகாஷ்