பதவி விலகும் முன் கடைசி 'அட்டாக்'... ட்ரம்ப்பின் ரகசியக் கூட்டத்தால் கதிகலங்கும் ஈரான்?!

பதவி விலகும் முன் கடைசி 'அட்டாக்'... ட்ரம்ப்பின் ரகசியக் கூட்டத்தால் கதிகலங்கும் ஈரான்?!
பதவி விலகும் முன் கடைசி 'அட்டாக்'... ட்ரம்ப்பின் ரகசியக் கூட்டத்தால் கதிகலங்கும் ஈரான்?!
Published on

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் ஈரானுக்கும் கடும் விரோதப் போக்கு இருந்து வருகிறது. ஒபாமா ஆட்சி காலத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தங்கள் நாடு மீதான பொருளாதார தடையை நீக்கியது ஈரான். ஆனால், ட்ரம்ப் அதிபர் ஆனதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதித்தார். 

ஈரானுக்கு மட்டும் பொருளாதார தடை இல்லாமல், அந்த நாட்டோடு வணிகம் செய்யும் மற்ற நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து அதிரடி காட்டினார். இப்படி ஈரான் பெயரை கேட்டாலே எரிச்சலாகும் வகையில் செயல்பட்டார் ட்ரம்ப். பதிலும் ஈரானும் மல்லுக்கு நின்றது. 

ட்ரம்ப்புடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார் ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி. அமெரிக்க ஆளில்லா விமானத்தை, தங்கள் எல்லையில் பறந்ததாக கூறி சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டினார் இதே அதிபர் ஹஸன். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக அமெரிக்கா, ஈரான் புரட்சிகர ராணுவ தலைவர் காசிம் சுலைமானியை கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது. இப்படி அமெரிக்கா - ஈரான் உறவு, ட்ரம்ப் ஆட்சி காலத்தில் ரணகளமாக இருந்துள்ளது. 

தற்போது ஆட்சி முடியவுள்ள தருவாயிலும் தன் எதிரி நாடான ஈரானுக்கு ஒரு ஷாக் கொடுக்க இருக்கிறார் ட்ரம்ப். இதற்காக, ரகசிய மீட்டிங் ஒன்றையும் நடத்தி இருக்கிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. 

கடந்த வியாழக்கிழமை துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, செயல் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் சி மில்லர் மற்றும் கூட்டுத் தலைவர்களின் தலைவர் மார்க் மில்லி உள்ளிட்ட தனது சகாக்களுடன் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது குறித்து அவர் ஆலோசனை கேட்டதாக 'டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

பதவிக்காலம் முடியும் முன் ஈரான் போன்ற தனது எதிரி நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சம் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மத்தியில் நிலவுவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில், இப்படி ஒரு தாக்குதலை நடத்தினால், அது ஈரானுடன் போருக்கு வழி வகுக்கும் எனக் கூட்டத்தில் ட்ரம்ப்பை அவரின் ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை, ஐ.நா-வின் கண்காணிப்புக் குழுவான சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஈரானிடம் யுரேனியம் கை இருப்புக்களை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், ஈரானின் யுரேனியம் கையிருப்பு வரம்பை விட 12 மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும் கூறியது. இதற்கு மறுநாள் ட்ரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ட்ரம்ப்பின் ஆலோசனை தகவல்கள் செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, அச்சம் காரணமாக ஈரான் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com