தங்களது நிறுவனத்தின் முக அங்கீகார தொழில்நுட்பத்தை காவல்துறையினர் பயன்படுத்த ஓராண்டுக்கு அமேசான் தடை விதித்துள்ளது.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அமெரிக்க போலீசார் அமேசான் நிறுவனத்தின் முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அதாவது போலீசாரிடம் இருக்கும் ஒரு புகைப்படத்தை பல ஆயிரக்கணக்கான புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். இதன் மூலம் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் காண்பர். ஆனால் இந்த முக அங்கீகார தொழில்நுட்பத்தில் சில குளறுபடிகள் இருப்பதாகக் கூறப்பட்டன.
வெள்ளை நிற மக்களை துல்லியமாக கணிக்கும் இந்த தொழில்நுட்பம், கறுப்பின மக்களிடையே தவறு செய்துவிடுவதாக கூறப்பட்டது. சில நேரங்கள் கறுப்பின ஆண், பெண் பாலினத்தைக் கூட இந்த தொழில்நுட்பம் தவறுதலாக சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டது.
இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டு என்பவரின் மரணம் அமெரிக்காவில் பரபரப்பைக் கிளப்பியது. இந்த மரணம் போலீசாரின் முக அங்கீகார தொழில்நுட்பத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. இந்நிலையில், தங்களது நிறுவனத்தின் முக அங்கீகார தொழில்நுட்பத்தை போலீசார் பயன்படுத்த அமேசான் தடை விதித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அமேசான், முக அங்கீகார தொழில்நுட்பத்தின் நெறிமுறை பயன்பாட்டை நிர்வகிக்க அரசு வலுவான விதிமுறைகளை வகுக்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனை ஏற்க அரசு தயாராக இருப்பதாக தெரிகிறது. எனவே அதற்கான அவகாசத்தை அரசுக்கு தரும்வகையில் ஒரு வருட தடைக்காலம் அறிவிக்கிறோம். இது அரசுக்கு போதுமான அவகாசத்தைத் தரும். இந்த விஷயத்தில் அரசுக்கு உதவ தயாராக இருக்கிறோம்'' என தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் தங்களது முக அங்கீகார தொழில்நுட்பத்தை போலீசார் பயன்படுத்த தடை விதித்துள்ளது.