உலகின் பணக்கார மனிதர்களுள் ஒருவராகக் கருதப்படும் அமேசான் நிறுவன தலைமை செயலதிகாரி ஜெஃப் பேசோஸ், தனது சொத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக அளிக்க விரும்புவதாகக் கூறி, அதற்கான பரிந்துரைகளை ட்விட்டரில் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ஜெஃப் பேசோஸ் இட்டுள்ள பதிவில், ‘தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறேன். உதவி தேவைப்படும் மக்களுக்கு அந்த உபயோகமாக அது இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். உங்களிடம் அதற்கான ஐடியாக்கள் இருந்தால் இந்த ட்வீட்டுக்கான பதிலில் அதைத் தெரிவிக்கவும்’ என்று அவர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு இடம்பெற்ற சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஐடியாக்களை கொட்டித் தீர்த்துவிட்டனர். போர்ஃப்ஸ் பத்திரிகையின் தரவுகளின்படி 76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய சொத்துகளுடன் உலகின் 3ஆவது பணக்கார மனிதராக இருப்பவர் ஜெஃப் பேசோஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் ஆகியோரைப் போலவே தனியாக தொண்டு நிறுவனம் எதையும் பேசோஸ் நடத்தவில்லை. அதேநேரம், கல்வி உதவிக்கென பிரத்யேகமாக அவரது பெற்றோர்களால் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் கணிசமான தொகையினை அளித்து வருகிறார்.