பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அனுப்பிய தனிப்பட்ட வாட்ஸ் அப் தகவல்கள் மூலம் அவரது படுகொலையில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குள், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை கடுமையாக விமர்சித்து, கஷோகி கட்டுரை எழுதி வந்ததால், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படுகொலையில், பட்டத்து இளவரசருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.
இந்தச் சூழலில் கஷோகி உயிரிழப்பதற்கு முன், வாட்ஸ் அப் மூலம் கனடாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒமர் அப்துல் அஜிஸுக்கு அவர் அனுப்பி வைத்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. அதில், சவுதி பட்டத்து இளவரசரை கடுமையாக விமர்சித்து கஷோகி அனுப்பிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பேக்மேன் வீடியோ கேமில் வருவது போல, எதிராக நிற்பவர்களை எல்லாம் சல்மான் கொன்று வருகிறார் என்றும், ஆதரவாளர்களை கூட அவர் விட்டு வைக்க மாட்டார் என்றும் அந்த வாட்ஸ்அப் தகவலில் கஷோகி தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்களை எல்லாம் சவுதி அதிகாரிகள் ஓட்டுக் கேட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே கஷோகி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒமர் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் மென்பொருளை தயாரித்த இஸ்ரேல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாகவும் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.