இலங்கை அரசியல் : அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி

இலங்கை அரசியல் : அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி
இலங்கை அரசியல் : அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி
Published on

இலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக அதிபர் மைத்ரிபால சிறிசேன நடத்திய அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை அக்டோபர் 26-ம் தேதி புதிய பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேன. ராஜபக்ச பிரதமராக பதவியேற்றது முதல் இலங்கை அரசியலில் ஒரு குழப்பமான நிலை நீடித்து வருகிறது. ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதை உணர்ந்து கொண்ட அதிபர் சிறிசேன, கடந்த நவம்பர் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு, ஜனவரி 5 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் சிறிசேன அறிவித்த உத்தரவுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. பின்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் நவம்பர் 14ம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கெடுப்பில் ராஜபக்ச அரசு தோல்வி அடைந்ததாக சபநாயகர் கரு ஜெயசூர்யா அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இதனை ஏற்க சிறிசேன மறுத்துவிட்டார். தான் நியமித்த பிரதமரை நீக்க முடியாது என்று அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடிதடிக்கு நடுவே கத்தியுடன் நாடாளுமன்றத்தில் வலம் வந்த ஒரு எம்.பி. கைது செய்யப்பட்டார். மேலும் நாடாளுமன்றத்தில் ராஜபக்ச ஆதரவு எம்.பிக்கள் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது மிளகாய்ப் பொடி தூவினர். அதேபோல், தடுக்க வந்த காவல்துறையினர் மீது தண்ணீரில் கரைத்த மிளகாய்ப் பொடி கலைவையை தெளித்தனர். இந்த சம்பவங்கள் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண அதிபர் மைத்ரிபால சிறிசேன அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். கொழும்புவில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அதிபரின் நிலைப்பாட்டையும் முடிவையும் ஏற்க முக்கிய கட்சிகள் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு அதிபரே காரணம் என்றும் அதற்கு அவர் தான் முடிவு கட்ட வேண்டும் என்றும் எம்பிக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. எம்பிக்களின் கேள்விகளுக்கு அதிபர் சிறிசேன முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com