அலிபாபாவின் இணை நிறுவனரும், சீன நாட்டை சேர்ந்த தொழிலதிபருமான ஜாக் மா கடந்த அக்டோபர் முதல் தலைமறைவாகி இருந்தார். சீன அரசு கொடுத்த நெருக்கடி தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
கடைசியாக கடந்த அக்டோபர் 24இல் சீன வங்கியாளர்கள் கலந்துகொண்ட பொதுச்சபையில் அலிபாபா நிறுவனர் ஜாக் மா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அரசின் வங்கித்துறை தொடர்பாக பொது வெளியில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார் ஜாக் மா.
இந்நிலையில் ஊரக பகுதியை சேர்ந்த ஆசிரியர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலில் ஜாக் மா கலந்து கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. “அவர் ஓடி ஒளியும் ஆளில்லை” என கேப்ஷன் போட்டு பகிர்ந்துள்ளார் சீன பத்திரிகையாளர் ட்வீட் செய்துள்ளார்.
சுமார் 36 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜாக் மா சீன மொழியில் ஆசிரியர்களுடன் பேசி உள்ளார். அலிபாபா என்ற சாம்ராஜ்யத்தை நிறுவிய அவருக்கு இந்த நெருக்கடி நிலையை எப்படி கடக்க வேண்டுமென்பதும் தெரியும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.