கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களாக உள்ளனர். அவர்களுக்கு காற்று மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் நேரிட்ட 15 சதவீத கொரோனா உயிரிழப்புகளுக்கு காற்று மாசும் காரணமாக இருந்திருக்கிறது. இதுபற்றிய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளால் உடல்நலத்திற்குத் தீங்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில், அதிக புகை மற்றும் தொழிற்சாலை வெளியேற்றும் மாசுக்களால் ஒவ்வொரு மனிதரின் வாழ்நாளிலும் இரண்டு ஆண்டுகள் குறைவதாகத் தெரியவந்தது. இந்த நிலையில், ஜெர்மன் மற்றும் சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், காற்று மாசுக்களால் கொரோனா மரணங்கள் நிகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தகவல்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை இதய நோய்கள் தொடர்பான சர்வதேச மருத்துவ ஆய்விதழில் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளில்தான் அதிக அளவில் உயிருக்கு ஆபத்தான காற்று மாசு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு 27 சதவீதம் கொரோனா உயிரிழப்புகளுக்குக் காரணமாக காற்று மாசும் இருக்கிறது. ஐரோப்பாவில் அது 19 சதவீதமாகவும், வட அமெரிக்காவில் 17 சதவீதமாகவும் உள்ளது.