ஆரம்பத்தில் வெற்றி, பின்னர் திடீர் கொரோனா எழுச்சி.. - சிங்கப்பூர், தைவானில் என்ன நடக்கிறது

ஆரம்பத்தில் வெற்றி, பின்னர் திடீர் கொரோனா எழுச்சி.. - சிங்கப்பூர், தைவானில் என்ன நடக்கிறது
ஆரம்பத்தில் வெற்றி, பின்னர் திடீர் கொரோனா எழுச்சி.. - சிங்கப்பூர், தைவானில் என்ன நடக்கிறது
Published on

சிங்கப்பூர், தைவான் நாடுகளில் ஏற்பட்டுள்ள திடீர் கொரோனா எழுச்சி சர்வதேச நாடுகளை கவலைகொள்ள செய்துள்ளது. இந்த திடீர் எழுச்சி வழிவகுத்த காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆசியாவின் மிகப் பெரிய நிதி மையங்களாக புகழப்படுபவை சிங்கப்பூர், தைவான். சமீபத்தில் இந்த இரண்டு நாடுகளும் மற்றொரு காரணத்திற்காக புகழப்பட்டன. கொரோனா வைரஸை திறம்பட சமாளித்தற்காக சமீபகாலமாக புகழப்பட்டு வந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த இரு நாடுகளிலும் ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்புகள் இருந்துவந்தன. ஆனால் இப்போது சிங்கப்பூரில் 250 மற்றும் தைவானில் 1,200 என கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த திடீர் அதிகரிப்பின் காரணமாக இருநாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்பு, அதாவது ஏப்ரல் கடைசி வாரத்தில், ப்ளூம்பெர்க் சிங்கப்பூரை “உலகின் சிறந்த இடம்” என்று மதிப்பிட்டிருந்தது. ``இந்த சிறிய நகரத்தில் கொரோனா பாதிப்புகள் பூஜ்ஜியத்தை நெருங்க உள்ளன. சிங்கப்பூர் அரசு பின்பற்றிய கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒரு கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த முன்னேற்றம். சிங்கப்பூர் ஏற்கனவே அதன் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியை ஈடுகட்ட சமமான தடுப்பூசிகளை வழங்கியதன் விளைவாக இந்த அளவு பாதிப்பு குறைந்துள்ளது" என்று ப்ளூம்பெர்க் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

ஆனால், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் அனைத்தும் தலைகீழாக மாறியது. தெற்காசியா உட்பட கொரோனா பாதிப்படைந்த பல நாடுகளில் இருந்து பயணிகள் இந்த விமான நிலையத்தில் வந்திறங்கி வருகின்றனர். இந்த விமான நிலைய ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தொழிலாளர்களில் சிலர் விமான நிலையத்தின் புட் கோர்ட்டில் உணவருந்தினர். இது மற்றவர்களும் உணவு கொடுக்கும் இடம் என்பதால் மேலும் சிலருக்கு கொரோனா பாதிப்படைந்திருக்கலாம் என்று அச்சம் நிலவி வருகிறது.

இந்த பாதிக்கப்பட்டவர்களில் பலர் இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய மிகவும் கொரோனா தொற்று வேரியன்டை கொண்டிருந்தனர். இந்த வேரியன்ட் பி .1.617 என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த சமயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "சிங்கப்பூரில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாகவும், அதனால் இந்தியாவிற்கான அந்நாட்டின் விமான சேவையை ரத்து செய்யுமாறும், சிங்கப்பூரின் முன்னேற்றங்கள் எதிர்பாராத விளைவை ஏற்படுத்தியுள்ளன என்றும், அங்கு காணப்படும் புதிய மாறுபாடு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றும்" ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக கருத்து வெளியிட்ட சிங்கப்பூர் அரசு, தங்கள் நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் எதுவும் இல்லை என்றும், B.1.617.2 வகை வைரஸ்தான் தங்கள் நாட்டில் பரவி வருவதாகவும், அது இந்தியாவிலிருந்து உருமாறிய வைரஸ் எனவும் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரகம் நேரடியாக டெல்லி முதல்வரின் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்திற்கு பதிலளித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக, சிங்கப்பூர் இப்போது கொரோனா ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து விமானங்களை சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகளும் சுகாதார வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றும் சிங்கப்பூர் அரசு கூறியிருக்கிறது. சர்வதேச பயணிகள் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று சிங்கப்பூர் அரசு நம்பிவருகிறது.

தைவானிலும் திடீரென கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்ததற்கு சர்வதேச பயணிகள் காரணமாக இருந்துள்ளனர். குறிப்பாக ஒரு சில சீனா ஏர்லைன்ஸ் விமானிகள், டாயுவான் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நோவோடலில் தங்கியிருந்தனர். இவர்கள் மூலமாக கொரோனா அங்கு உச்சம் பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாதிப்படைந்தவர்கள் பலர் பி .1.1.7 என அழைக்கப்படும் கொரோனா வைரஸின் இங்கிலாந்து மாறுபாட்டை கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த ஆண்டு சீனா வைரஸ் தோன்றியதாக அறிவித்தவுடன், தைவான் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு உடனடி தடையை விதித்தது. மேலும் இந்த தடை இன்னும் ஒரு வருடத்தில் நடைமுறையில் உள்ளது. எனினும், சில நாட்கள் முன் தடுப்பூசி போடாத விமானிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை 14 நாள் என்ற அளவிலிருந்து ஐந்து நாட்களாகவும், பின்னர் மூன்று நாட்களாகவும் தைவான் அரசாங்கம் தளர்த்தியது. விதிகளை தளர்த்திய சில நாட்களில் சீனா ஏர்லைன்ஸ் விமானிகளுடன் தொடர்புடைய கொரோனா பாதிப்பு விவகாரங்களை தைவான் எதிர்கொள்ள தொடங்கியது. இதன்பின்னர் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது.

இதற்கிடையே, பிபிசி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களில் வரும் தகவல்களின்படி, தைவான் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதை நிறுத்தின. பிப்ரவரி நடுப்பகுதியில் தைவான் 1,000 பேருக்கு வெறும் 0.57 விகிதம் வைரஸ் பரிசோதனைகளை மட்டுமே செய்து வருகிறது. இதுவே சிங்கப்பூரின் விகிதம் 6.21 மற்றும் இங்கிலாந்தின் விகிதம் 8.68 என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com