ட்விட்டர், மெட்டா, கூகுள் என உலகின் டெக் ஜாம்பவான்களாக இருக்கக் கூடிய நிறுவனங்கள் அனைத்தும் தத்தம் ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து வந்தது உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. இவற்றை தொடர்ந்து உலக பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி பல முக்கிய, முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவது நாள்தோறும் தவறாது செய்திகளில் இடம்பெறுவதே வாடிக்கையாகிவிட்டது.
இப்படியாக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பெரு நிறுவனங்கள் வேலையை விட்டு தூக்கியதால் தற்போது வேறு வேலையும் கிடைக்காமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மனிதர்களை மட்டுமே பணி நீக்கம் செய்து வந்த கூகுள் நிறுவனம் தற்போது அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பணியாற்றும் ரோபோக்களையும் நீக்கியிருக்கும் செய்தி ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்குமே வழி வகுத்திருக்கிறது.
அதன்படி, ஆல்ஃபபெட்டின் மூன்ஷாட் ஆய்வகத்தில் Everyday robots என்ற பெயரில் பரிசோதனை துறையில் 200க்கும் அதிகமான ஊழியர்கள் ரோபோடிக் திட்டங்களில் பணியாற்றி வந்தனர். இந்த துறையில் உணவக மேஜைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை சேகரித்து நீக்குவது, கதவுகளை திறப்பது போன்ற பணிகளுக்காக ஆல்ஃபபெட் நிறுவனம், ரோபோக்களை நியமித்திருந்தது. இதன் மூலம் செலவினங்களை குறைக்கும் திட்டத்தில் அந்நிறுவனம் இருந்தது.
கொரோனா காலத்தின் போது ரோபோக்கள் மிகவும் உதவிகரமாக இருந்தாலும், செலவை குறைக்க ஊழியர்களை பணி நீக்கம் செய்த பின்னும் கூகுள் நிறுவனத்தால் இந்த ரோபோக்களை பராமரிக்க முடியவில்லையாம். 100 ரோபோக்களை பராமரிக்கவே எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டி இருப்பதால் அவற்றின் செயல்பாட்டை நிறுத்த ஆல்ஃபபெட் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஏற்கெனவே 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள் நிறுவனம் தற்போது ரோபோக்களையும் துடைத்தெறிந்திருப்பது பெரும் அதிர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. மேலும், ஊழியர்களும் வேண்டாம், ரோபோக்களும் வேண்டாம் என பணி நீக்கம் செய்துவிட்டால் எதை வைத்து யாரை வைத்து கூகுள் தனது நிறுவனத்தை நடத்தும் என்ற கேள்வியும் பரவலாக எழுப்பபப்ட்டு வருகிறது.
ஏற்கெனவே உலகின் அதி முக்கிய தேடு பொறியாக இருக்கும் கூகுளின் பயன்பாடு சாட் GPT வந்ததை அடுத்து குறைந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து ஊழியர்கள், ரோபோக்களையும் நீக்கி வருவது கூகுள் தனக்குத்தானே குழியை தோண்டிக் கொள்வதற்கு சமமாகவே இருக்கும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.