உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி ஜெஃப் பேசோஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்தவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். ஆனால், கடந்த 2018ம் ஆண்டு அவர் தன்னுடைய முதலிடத்தை இழந்தார். பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் முதலிடத்தை பிடித்தார். அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இருப்பினும், நீண்ட நாட்களுக்கு பின்னர் கடந்த வியாழக்கிழமை மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி இருந்தார். அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவிகிதம் வரை குறைந்ததுதான் அதற்கு காரணம். இதனால், 103 பில்லியன் டாலர்(7 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய்) சொத்து மதிப்புடைய ஜெஃப் பேசாஸை பின்னுக்கு தள்ளி, 105.7 பில்லியன் டாலர் (7லட்சத்து 48ஆயிரம் கோடி ரூபாய்) சொத்துமதிப்புடன் முதலிடத்துக்கு முன்னேறினார்.
ஆனால், ஒருநாள் கூட இந்த இடம் அவருக்கு நிலைத்திருக்கவில்லை, அமேசான் நிறுவனத்தின் பங்குகள் நேற்று சற்றே அதிகமானது. இதன்மூலம் ஜெஃப் பேசாஸின் மொத்த சொத்து மதிப்பு 109.9 பில்லியன் டாலராக(7 லட்சத்து 78ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்தது. எனவே மீண்டும் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி பணக்காரர்கள் பட்டியலில் ஜேஃப் பேசாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.