அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் அடுத்த தலைவராக சைஃப் அல்-அடெல் பொறுப்பேற்கலாம் என்று தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று கொல்லப்பட்டார். 2001ஆம் ஆண்டு நடந்த அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான அய்மன் அல்-ஜவாஹிரி, 20 ஆண்டுகால தேடுதல் வேட்டைக்குப் பிறகு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், "அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதால் அமெரிக்காவில் செப்டம்பர் 11ல் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 3,000 பேரின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி?
அல்கொய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்கொய்தா அமைப்பின் தலைவரானார் அய்மன் அல்-ஜவாஹிரி. 71 வயதான ஜவாஹிரி எகிப்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இளம் வயதிலேயே மத அடிப்படைவாத குழுவில் இணைந்தார் ஜவாஹிரி. பின்னர் அப்போதைய எகிப்து அதிபர் அன்வர் சதாத்தை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார். இதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 1997ல் எகிப்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் மூளையாக அல் ஜவாஹிரி செயல்பட்டார்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001ல் நடந்த தாக்குதலில் அல் ஜவாஹிரிக்கு முக்கிய பங்கு உண்டு. ஒசாமா பின்லேடனின் நம்பிக்கைக்குரிய 5 பேர் படையில் ஒருவராக இருந்த அய்மன் அல்-ஜவாஹிரி, ஒசாமா கொல்லப்பட்ட பின்னர் அல்கொய்தா அமைப்பின் தலைவரானார். அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் அய்மான் அல்-ஜவாஹிரியை சேர்த்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அவரை தேடி வந்தது. ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஜவாஹிரி, சில நேரங்களில் குறிப்பாக, இந்திய விவகாரங்களில் வீடியோக்களில் தோன்றி பேசிவந்தார்.
அல்கொய்தா அடுத்த தலைவர்?
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் அடுத்த தலைவராக சைஃப் அல்-அடெல் பொறுப்பேற்கலாம் என்று மத்திய கிழக்கு அரசியல் ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன. எகிப்து நாட்டின் முன்னாள் ராணுவ வீரரான சைஃப் அல்-அடெல், அல்கொய்தா அமைப்பை தோற்றுவித்த உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். கடந்த 1980களில் மக்தப் அல் கித்மாத் எனும் தீவிரவாத அமைப்பில் இணைந்து நடத்தியவர்.
ஒசாமா பின்லேடனையும், அய்மான் அல் ஜவாஹிரியையும் சந்தித்த சைஃப் அல்-அடெல், அதன்பின் எகிபுத் இஸ்லாமிக் ஜிகாத்தில் இணைந்தார். கடந்த 1980களில் ஆப்கானிஸ்தான் ரஷ்ய ராணுவத்துக்க எதிராக அதெல் போராடியுள்ளார். ஒசாமா பின் லேடனின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகவும் சைஃப் அல்-அடெல் இருந்துள்ளார்.
அமெரிக்காவால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள சைஃப் அல்-அடெல் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவித்திருக்கிறது அமெரி்க்கா.
இதையும் படிக்க: ‘கைதிக்கு என்னை பாலியல் அடிமையாக்கினார்கள்’.. இஸ்ரேலை உலுக்கிய பெண் காவலரின் புகார்!