ஒரு மாத 'உயிர்' போராட்டம்... தாய்லாந்து மக்களை கலங்கவைத்த யானை!

ஒரு மாத 'உயிர்' போராட்டம்... தாய்லாந்து மக்களை கலங்கவைத்த யானை!
ஒரு மாத 'உயிர்' போராட்டம்... தாய்லாந்து மக்களை கலங்கவைத்த யானை!
Published on

தாய்லாந்தில் ஒரு மாதமாக உயிருக்குப் போராடிய யானையின் மரணம், அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்தின் ரேயாங் மாகாணத்தில் கடந்த மாதம் 'என்கா சன்' என்ற யானை, அங்குள்ள தோப்பு ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவர்கள் வந்து சோதனை செய்தபோது யானையின் வேதனை புரியவந்தது. யானையின் உடம்பு முழுவதும் 15 இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தது. பின்புறம், வால், முன்னங்கால், நுரையீரல்கள், இருதயம் மற்றும் குடல்கள் என அனைத்திலும் குண்டுகள் பாய்ந்து பார்பபதற்கே மோசமான நிலையில் கிடந்தது யானை. அதன் நிலையை உணர்ந்த வன மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

 கிட்டத்தட்ட ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்த என்கா சன் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். ஆனால், யானைக்கு மீண்டும் சோகமே வந்தது. வனத்துக்குள் சில நாட்களிலேயே சேறு நிறைந்த குளத்துக்குள் யானை விழுந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 48 மணிநேரம் வரை சேற்றுக்குள் மயங்கி கிடந்ததால் யானையின் உடல் வெப்பநிலை முற்றிலும் குறைந்திருந்தது. போதாக்குறைக்கு குண்டு காயங்களால் மிகுந்த சோர்வுடன் இருந்தது.

இந்த முறை யானையை காப்பாற்ற போராடினர் மருத்துவர்கள். வெப்பமான உடல்நிலை கொண்டுவர, குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு அங்கு தீ வைக்கப்பட்டு, வெதுவெதுப்பான உடல்நிலையை கொண்டுவர முயன்றனர். ஆனால், மருத்துவர்களின் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. யானை என்கா சன் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தது. குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டபோதே, யானையின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகின. யானையின் பரிதாப நிலை குறித்து அப்போதே நெட்டிசன்கள் சோகமான பதிவுகளை இட்டிருந்தனர்.

இந்நிலையில், யானை உயிரிழந்த செய்தி அறிந்ததும், சம்பவ இடத்துக்கே வந்து மக்கள் யானைக்கு அஞ்சலி செலுத்தினர். இதனால், அந்த இடமே நேற்று சோகமயமாக காட்சி அளித்தது என்கின்றன தாய்லாந்து ஊடகங்கள்.  யானைகள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்று தாய்லாந்து. அம்மக்கள் வெள்ளை யானையை புனிதமாக கருதுவார்கள். தங்க தட்டில்தான் அந்த யானைக்கு உணவளிப்பார்கள். வளர்ப்பு யானைகளை காட்டிலும் காட்டு யானைகள் ஆயிரக்கணக்கில் தாய்லாந்து காடுகளில் வசிக்கின்றன. அந்நாட்டு வன பகுதியில் சுமார் 2 ஆயிரம் யானைகள் வாழ்ந்து வருகின்றன என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று.

தேசிய விலங்காக யானையை அறிவித்துள்ள தாய்லாந்து அரசு, அதனை பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவித்து யானை வேட்டையை கட்டுப்படுத்தி வருகிறது. என்றாலும், வனப்பகுதியை ஒட்டி அவ்வப்போது மனித - யானை மோதல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தாய்லாந்து முன்பு 90 சதவீதம் காடுகளாக இருந்தது. 2015 ஆம் ஆண்டில் காடுகள் 31.6 சதவீதமாக சுருங்கியது. வன பகுதியை விளைநிலம் ஆக்கி உணவு உற்பத்திகளை செய்வதே இந்தச் சுருக்கத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த அழிப்பின் போதுதான் யானைகள் - மனித மோதல்கள் அதிகமாக நடக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது அந்நாட்டு அரசு. ஆனாலும் பயன் இல்லாமல் போகிறது. விளைவு என்கா சன் போன்ற யானைகள் உயிரை கொடுத்து கொண்டு இருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com