ஆப்கானிஸ்தான் நாட்டில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பெண் காவலரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் பெண் காவலரின் பார்வை பறிபோயுள்ளது.
ஆப்கானிஸ்தான் காஸ்னி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றியவர் கடேரா (33). கனவுகள் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வந்த கடேராவுக்கு காவலர் பணி என்பதே கனவுப்பணி. பணி கிடைத்து 3 மாதங்கள் தொடர்ந்த நிலையில் ஒருநாள் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தார் கடேரா. அப்போது இருசக்கர வாகனத்தில் சிலர் கடேரா மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டனர். அவரது கண்களில் கத்தியால் குத்தினர். நிலைதடுமாறி கீழே விழுந்தவர் கண் விழித்தபோது மருத்துவமனையில் இருந்தார். ஆனால் அவருக்கு இருள் மட்டுமே தெரிந்தது. கண்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் பார்வை பறிபோனதாக தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள். தன்னுடைய பார்வையோடு சேர்த்து ஒட்டுமொத்த கனவும் பறிபோனதாக வருத்தம் தெரிவித்துள்ளார் இந்த பெண் காவலர்.
இந்த கொடூர தாக்குதலை தாலிபன் அமைப்பினர் செய்ததாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அதேவேளையில் வீட்டை விட்டு வெளியே போய் மகள் வேலை பார்ப்பதை விரும்பாத கடேராவின் தந்தையே இந்த கொடூர தாக்குதலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து அந்நாட்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஒருவேளை தனக்கு பார்வை கிடைத்தால் மீண்டும் தன்னுடைய கனவுப்பணியை தொடர்வேன் என நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார் கடேரா.
செய்தி மற்றும் புகைப்படம்: Reuters