"நீ ஒரு பெண், வீட்டுக்கு செல் என்ற தலிபான்கள்" - அச்சத்தில் ஆப்கன் ஊடகவியலாளர்கள்

"நீ ஒரு பெண், வீட்டுக்கு செல் என்ற தலிபான்கள்" - அச்சத்தில் ஆப்கன் ஊடகவியலாளர்கள்
"நீ ஒரு பெண், வீட்டுக்கு செல் என்ற தலிபான்கள்" - அச்சத்தில் ஆப்கன் ஊடகவியலாளர்கள்
Published on

நீ ஒரு பெண் என்பதால் இனி வேலைக்கு வரக் கூடாது என்று செய்தி நிறுவன தொகுப்பாளரை தலிபான்கள் வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.  

ஆப்கானிஸ்தான் நாட்டை இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமான தலிபான் கைகளில் அதன் ஆட்சி சென்றுள்ளது. தலிபான்கள் ஆட்சியில் எப்போதும் பெண்களுக்கு கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அந்த விதிமுறைகள் இப்போதும் தொடர்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்லும் சூழல் மீண்டும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தனியார் செய்தி நிறுவன தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி புரிபவர் ஷப்னம் தவ்ரான். அந்த தொலைக்காட்சி நிறுவனம் தலிபான்கள் வசம் வந்துள்ளது. ஷப்னம் வழக்கம்போல தன்னுடைய பணியை செய்வதற்காக அலுவலகம் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய தலிபான்கள் "நீ ஒரு பெண் வீட்டுக்கு செல்" எனக் கூறியுள்ளனர். மேலும் "ஆட்சி மாறிவிட்டது இனி இதுதான் கட்டளை" எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஷப்னம் வேறு எதுவும் செய்வதறியாமல் வீட்டுக்கு திரும்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான ஆர்டிஏ பாஷ்டோவில் வேலை செய்கிறேன். தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றிய பிறகு, மறுநாள் காலையில் நான் என் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கு வேலைக்கு வர வேண்டாம் என்று சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டேன். விதிகள் இப்போது மாறிவிட்டன, பெண்கள் இனி ஆர்டிஏவில் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். பெண்கள் படிப்பதற்கும் வேலைக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் முன்பு அறிவித்தபோது, நான் உற்சாகமடைந்தேன். ஆனால், நான் என் அலுவலகத்தில் யதார்த்தத்தை அனுபவித்தேன், அங்கு பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்கள். எனது அடையாள அட்டையை அவர்களிடம் காண்பித்தேன். ஆனாலும் அவர்கள் என்னை வீட்டிற்கு செல்லுமாறு கூறினர்.

அரசு நடத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை மட்டும் வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள். தனியார் சேனல்களில் பெண்களுக்கு இதே போன்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை.

நீங்கள் ஒரு பெண், இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள் என்றனர். என் ஆண் சகாக்கள் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் என்னை அனுமதிக்கவில்லை. ஆர்டிஏவில் பெண்கள் இனி வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர்கள் தெளிவாக கூறினர். என்னால் இனி இங்கு வேலை செய்ய முடியாது. தற்போது ஆப்கானிஸ்தானில் வாழ்வது கடினம். எனக்கு ஏதேனும் ஆதரவு கிடைத்தால், நான் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பிவிடுவேன். என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது” என்று தெரிவித்தார். 

ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள் "இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கான உரிமை மதிக்கப்படும்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com