கண்ணி வெடிகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் பணியில் வீரபெண்மணிகள்..!

கண்ணி வெடிகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் பணியில் வீரபெண்மணிகள்..!
கண்ணி வெடிகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் பணியில் வீரபெண்மணிகள்..!
Published on

ஆப்கானிஸ்தானில் மண்ணுக்குள் புதைந்து‌கிடக்கும் கண்ணி வெடிகளை கண்டறிந்து அவற்றை செயலிழக்க செய்யும் பணியில் இரு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். யார் அந்த பெண்கள்?

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் ப‌யங்கரவாத அமைப்புகளிடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்றுவருகிறது. அவ்வப்போது இரு தரப்பினரிடையே ஏற்படும் மோதலில் அப்பாவி மக்களும் கொல்லப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் தலிபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்துவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கண்ணிவெடி புதைக்கப்பட்டிருப்பதை அறியாத பொதுமக்கள், விறகு எடுக்க போகும்போதும், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போதும் அவற்றை மிதித்து உயிரிழக்கின்றனர்.

அப்படி பாமியன் மாகாணத்தில் சோவியத் - ஆப்கான் போரின்போது தலிபான் பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஃபாத்திமா அமிரி மற்றும் ஃபிசா ஆகிய இருவர் ஈடுபட்டுள்ளனர். மலைப் பகுதிக்கு சென்ற இளைஞர் ஒருவர் திரும்பிவரவில்லை, அவரது உயிரிழப்புக்கு கண்ணிவெடிகளே காரணம் எனக்கூறப்பட்டது. அந்த இளைஞரின் பிரிவால் வாடும் குடும்பத்தை பார்த்துதான் கண்ணிவெடிகளை அகற்றும் குழுவில் இணையவேண்டும் என்ற எண்ணம் தமக்குவந்ததாக ஃபாத்திமா அமிரி கூறுகிறார்.

கண்ணிவெடிகளை அகற்றும் குழுவில் பணியாற்றும் மற்றொரு பெண் ஃபிசா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தொழிலில் சேரவேண்டாம் என தனது தாயும், மாமியாரும் அறிவுறுத்தியும், சவாலான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த வேலைக்கு வந்ததாக கூறுகிறார் ஃபிசா. இருப்பினும் தனது குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்க தவறுவதில்லை என உற்சாகமாக கூறுகிறார்.

இந்த இரு பெண்களும் பாமியன் மாகாணத்தில் தினமு‌ம் இரண்டு மணி நேரத்தை கண்ணிவெடிகளை அகற்றுவதில் செலவிடுகின்ற‌னர். பாமியன் மாகாணத்தை கண்ணி வெடிகளற்ற பகுதியாக்குவதே தங்களது நோக்கம் என்கின்றனர் இந்த வீர பெண்மணிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com