ஆப்கானிஸ்தான் சிறைகளில் உள்ள முக்கியமான தலிபான் சிறைக்கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒப்பந்தத்தில் அதிபர் அஷ்ரப் கானி கையெழுத்திட்டுள்ள நிலையில், தலிபான்களுக்கும் அரசுத் தரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு ஆப்கன் நாடாளுமன்றத்தில் தலிபான் கைதிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அமைதிப்பேச்சுவார்த்தைக்கான தடையை நீக்குவற்குமான முதல்கட்ட நடவடிக்கையாக மிக முக்கியமான கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர் என ஆப்கன் அரசு அறிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர், மிக முக்கியமான 400 தலிபான் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். " எங்கள் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பின்னர், ஒரு வாரத்தில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் சாஹின் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் அதிபரின் கையெழுத்துக்காக அனைவரும் காத்திருப்பதாகவும், உத்தரவில் அவர் கையெழுத்திட்டதும் பேச்சுவார்த்தை சில நாட்களில் தொடங்கும் என ஆப்கன் அரசுத் தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.