ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி வருவதுடன், பாதுகாப்புப் படையினர் மீதான திடீர் தாக்குதல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். அண்மையில் ஒரு சிறைச்சாலையில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி தலிபான் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய முயற்சி செய்தனர். அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைநகர் காபூலில் அதிபர் அஸ்ரப் கானி தலைமையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடக்கமாக 400 அதிமுக்கியமான தலிபான் சிறைக்கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போரால் ஏற்பட்டுள்ள ரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான தடையை நீக்குவதற்கும் 400 தலிபான் கைதிகளை விடுதலை செய்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பினருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர், தலிபான் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.