ஆப்கானிஸ்தானில் அரசுத் துறையில் பணிபுரியும் ஆண்கள், முகத்தில் தாடி இல்லாமல் அலுவலத்துக்கு செல்லக் கூடாது என்று தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிபர் அஷ்ரஃப் கனி தலைமையிலான அரசை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அது முதலாக, ஆப்கானிஸ்தானில் பழங்கால ஷரியத் முறையை தலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பெண்கள் கல்வி நிலையங்கள் செல்லவும், வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது; பெண்கள் வெளியே எங்கு சென்றாலும் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்தனர். இதற்கு எதிராக அந்நாட்டில் பெண்கள் போாரட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவற்றுக்கு தலிபான்கள் செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அரசுத் துறைகளில் பணிபுரியும் ஆண்கள், தாடி இல்லாமல் அலுவலகத்துக்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஆண்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும்; அலுவலகங்களில் உரிய நேரங்களில் கட்டாயம் தொழுகை செய்ய வேண்டும். மேற்கத்திய உடைகளை அணியக் கூடாது; ஆப்கானிஸ்தானின் பழங்கால உடைகளையே அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.