ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள நிகழ்கால உலக பணக்காரர்கள் (Real Time Billionaires) பட்டியலில் 155.7 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு 12.35 லட்சம் கோடி ஆகும்.
முன்னதாக இரண்டாவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி, கவுதம் அதானி தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 273.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வருகிறார்.
60 வயதான கௌதம் அதானி, லூயிஸ் வியூட்டன் நிறுவனத்தின் பெர்னாட் ஆர்னால்டை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு கடந்த மாதம்தான் முன்னேறியிருந்தார். ஒரு மாதத்திற்குள்ளாக மேலும் ஒரு இடம் முன்னேறி அசுர வளர்ச்சியில் பயணித்துள்ளார் அதானி.
அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. உலகின் முதல் 10 பணக்காரர்களில் இந்த ஆண்டில் மட்டும் இவ்வளவு சொத்து நிகர மதிப்பு அதிகரிப்பைக் கண்டது அதானி மட்டுமே.