அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் இழப்பைச் சந்தித்தன. 86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதுடன், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது. மேலும், இவ்விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், அதானி நிறுவனத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கிக் கணக்குகளை சுவிஸ் வங்கி நிர்வாகம் முடக்கியுள்ளது என தகவல் வெளியானது. அதில், சுவிட்சர்லாந்தில் கோதம் சிட்டி என்ற புலனாய்வு இணையதள செய்தி நிறுவனம், 2021-ஆம் ஆண்டு அதானி குழுமம் பண மோசடி, பங்கு பரிவர்த்தனையில் மோசடி செய்துள்ளதாக செய்தி வெளியிட்டதை ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. இதனால் சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணை நடத்தி, அதானியின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை அதானி குழுமம் மறுத்துள்ளது.
இதுகுறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம், மறுக்கிறோம். அதானி குழுமத்திற்கு சுவிஸ் நீதிமன்ற நடவடிக்கைகளில் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் நிறுவனத்தின் கணக்குகள் எதுவும் எந்த அதிகாரியாலும் பறிமுதல் செய்யப்படவில்லை. கூறப்படும் உத்தரவில்கூட, சுவிஸ் நீதிமன்றம் எங்கள் குழு நிறுவனங்களைப் பற்றி குறிப்பிடவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானது, பகுத்தறிவற்றது மற்றும் அபத்தமானது.
இது, எங்கள் குழுவின் நற்பெயர் மற்றும் சந்தை மதிப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்த ஒரே கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படும் மற்றொரு திட்டமிடப்பட்ட மற்றும் அற்புதமான முயற்சி. அதானி குழுமம் வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்து சட்ட மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்கவும் உறுதியாக உள்ளது. இந்த முயற்சியை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற தகவலை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை, நீங்கள் தொடர முடிவு செய்தால், எங்கள் அறிக்கையை முழுமையாகச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அது தெரிவித்துள்ளது.