உலகின் பணக்காரர் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி, விரைவில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறுவார் எனச் சொல்லப்படுகிறது.
அதானி குழுமத்தின் தலைவராக இருப்பவர் கௌதம் அதானி. அதுபோல், டெஸ்லா மற்றும் சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராகவும் இருப்பவர் எலான் மஸ்க்.
இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நம்பர் 1 பணக்காரராக இருந்தார். ஆனால், அவர் தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் கெளதம் அதானி உள்ளார். ப்ளூம்பெர்க் தரவுகளின் அடிப்படையில் கெளதம் அதானியிடம், தற்போது சுமார் 121 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து உள்ளது. அதுபோல் எலான் மஸ்க்கிடம், தற்போது 137 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பே அவர் கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே அவரது சொத்து மதிப்பு சரிவைச் சந்தித்து வர, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, அதிகரித்து வருகிறது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் எலான் மஸ்க், 133 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். அதேநேரத்தில் அதானிக்கு 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்து அதிகரித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் கௌதம் அதானி, பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. அதாவது, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டைப் போலவே தினமும் சரிந்து, கெளதம் அதானியின் சொத்து மதிப்பு தினமும் அதிகரித்தால், அடுத்த 35 நாட்களுக்குள் கௌதம் அதானி உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 162 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிரெஞ்சு தொழிலபதிபரும், எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் (73) உள்ளார். முகேஷ் அம்பானி 87.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8 ஆவது இடத்தில் உள்ளார். முதல் பத்து பேரில் 7 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.