பொம்மையை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம் அனபெல்லா. சில வருடங்களுக்கு முன்னர் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை ஒரு கார் விபத்தில் இறந்துவிட, தனது பெற்றோரை விட்டுப் பிரிய மனமில்லாத அந்தக் குழந்தையின் ஆன்மா அது மிகவும் விரும்பும் பொம்மைக்குள் புகுந்து வாழ ஆசைப்படுகிறது. அந்தக் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் பெற்றோர், அதற்கு உதவி புரிகின்றனர். அந்தப் பொம்மைக்குள் சென்ற அந்தக் குழந்தையின் ஆத்மா, அதன்பின்னர் அங்கு வரும் மனிதர்களை அச்சுறுத்துகிறது. பொம்மையால் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களை ரசிகர்கள் பார்த்து மிளரும் வகையில் அனபெல்லா படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனபெல்லா போன்று நிஜத்தில் ஒரு பொம்மை உலா வருகிறது என்றால் நம்ப முடியுமா?.. இங்கிலாந்தை சேர்ந்த லீ ஸ்டீர் என்பவர் அண்மையில் இணையத்தில் அழகான பொம்மை ஒன்றை வாங்கியுள்ளார். இந்த பொம்மையை லீ ஸ்டீரிடம் விற்ற பெண், இந்த பொம்மை தனது கணவரை தொடர்ந்து தாக்குவதாகவும், அதுமட்டுமின்றி தனது நகைகளை எல்லாம் எடுத்து ஒளித்து வைத்துவிடுவதாகவும் இணையத்தில் தெரிவித்திருந்தார் .
இதனால் ஆச்சர்யமடைந்த லீ ஸ்டீர் ஆர்வமிகுதியால் அந்த பொம்மையை வாங்கி, அதற்கு எலிசபெத் என பெயரிட்டுள்ளார். தொடர்ந்து அந்த பொம்மையை கண்காணித்து வந்த லீ, பேஸ்புக் நேரலையில் அந்த பொம்மையின் செயல்பாடுகளை ஒளிபரப்பியுள்ளார். வீடியோவில் எலிசபெத், லீயின் தந்தையை தாக்கியதாகவும், இதனால் தந்தையின் கைகளில் ஆறு இடங்களில் கீறல்கள் ஏற்பட்டதாகவும் கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது எலிசபெத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த சிலர் இதனை பேய் பொம்மை என்றும், அனபெல்லா என்றும் கருத்திகளை பகிர்ந்து வருகின்றனர்.