லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடியை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து அவர் லண்டன் சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சட்ட ரீதியாக ஈடுபட்டுள்ளன. இதற்கான வழக்கு விசாரணை, இங்கிலாந்து 'வெஸ்ட்மினிஸ்டர்' நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை கடந்தாண்டு செப்டம்பர் 7-க்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஜனவரியில் நிரவ் மோடிக்கு எதிரான சாட்சிகள் விசாரணை நடந்தபோது பிப்ரவரி 25-ல் தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி சாமுவேல் கூஸ் தீர்ப்பை வாசிக்கிறார். இதில் நிரவ் மோடியை நாடு கடத்த உத்தரவிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.