கலிபோர்னியா: பெண்ணின் வாழ்வில் விளையாடிய Butterfly effect-பற்றி எரிந்த 10,000 ஏக்கர் காடு
யாரோ ஒருவர் ஏதோ ஒரு இடத்தில் செய்யும் செயல், அது நம்மை அறியாமலே கூட நிகழலாம். ஆனால் அது மற்றவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைத்தான் 'பட்டர் ஃப்ளை எஃப்க்ட்' (Butterfly effect) என்கிறார்கள். எல்லோருடைய வாழ்விலும் இந்த எஃபெக்ட் ஒரு எஃபெக்டை காட்டியிருக்கும். அப்படித்தான் அலெக்ஸாண்ட்ரா சூவர்னேவாவின் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வடக்கு கலிபோர்னியாவில் உள்ள சாஸ்தா கவுன்டியில் உள்ள 9,850 ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியிருக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அலறி அடித்துக்கொண்டு தீயணைப்புத்துறை, காவல்துறைக்கு தகவல் கொடுக்க அங்கு வந்த காவல்துறை இந்த திடீர் காட்டுத்தீக்கு என்ன காரணம் என விசாரணை நடத்தியுள்ளது. அப்போது மலைப்பகுதியில் அலெக்ஸாண்ட்ரா சூவர்னேவா என்ற பெண் உடலில் நீரிழப்பு (dehydrated) ஏற்பட்டு தவித்துவந்தார். உடனே அவரை மீட்ட தீயணைப்புத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறை அவரிடம் நடத்தி விசாரணையில் பட்டர் ஃப்ளை எஃபெக்ட் அவர் விதியில் விளையாடியது வெளிச்சமானது. அந்த பெண் கூறும்போது, ''மலையேறும் போது தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு விட்டது. தண்ணீர் தேடி அலைந்தேன். அப்போது குட்டையில் கரடியின் சிறுநீர் கலந்திருந்ததைக்கண்டேன். அதை வடிகட்ட டீ பேக்கை எடுத்தேன். மேலும் அதை சூடுபடுத்தி குடிக்கலாம் என சூடுபடுத்த நினைத்தேன். ஆனால் என்னுடைய அந்த முயற்சி தோல்வியடைந்தது. ஆகவே நான் அந்த தண்ணீரையே குடித்துவிட்டு மலையேற தொடங்கினேன்'' என்றார். அவருடைய சட்டப்பையிலிருந்து லைட்டர் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த காட்டுத்தீக்கு அந்த பெண் தான் காரணம் என்று கூறி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.