2020-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2020ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் ஆர்.மில்க் ரோம் (72), ராபர்ட் பி. வில்சன்(83) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஏலக் கோட்பாட்டின் மேம்பாடு மற்றும் ஏலக் கோட்பாட்டின் புதிய வடிவமைப்புகளை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை உலகமே பார்த்துக்கொண்டு இருந்தாலும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பால் ஆர்.மில்க் ரோம் வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது நாட்டில் இரவு. நோபல் பரிசு அறிவிக்கும் கமிட்டியும் மில்க்ரோமை தொடர்புகொள்ள முடியவில்லை.
(பால் ஆர்.மில்க் ரோம்)
இதனையடுத்து அவரோடு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ராபர்ட் பி. வில்சன், இரவு 2.15 மணிக்கு மில்க்ரோம் வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை ஒலித்துள்ளார். வாசலில் உள்ள கேமராவில் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது. அதில் பால் பால் என வில்சனும் அவரது மனைவியும் கதவை தட்டுகின்றனர்.
(ராபர்ட் பி. வில்சன்)
’’பால்.. நான் வில்சன்.. நீங்கள்.. நீங்கள் நோபல் பரிசு வென்றுள்ளீர்கள். அவர்களால் உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை. உங்களது எண் அவர்களிடத்தில் இல்லை என நினைக்கிறேன்’’ என கதவோரம் நின்று கூறுகிறார். அழைப்பு மணி ஒலித்தது பாலின் மனைவிக்கு செல்போன் மூலம் தெரியவர, அதன்பின்னரே தனக்கு நோபல் கிடைத்த செய்தியை பால் தெரிந்துகொண்டுள்ளார்.