ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - காசா ஆகிய நாடுகளிடம் தற்போது நடைபெற்று வரும் போர்களே, அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி இன்னும் சில நாடுகளில் போர் நடைபெற்று வருவதுதான் வேதனையான விஷயம்.
குறிப்பாக, 2022 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 1 வரை 32 நாடுகளில் போர் நடைபெற்றதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதில் 10,000 பேர் உயிரிழந்ததாகவும் அது தெரிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான், புர்கினா, எத்தியோப்பியா, ஈராக், ஏமன், சிரியா, சோமாலியா, நைஜீரியா, லிபியா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, மியான்மர், கொலம்பியா, மாலி, DR காங்கோ ஆகிய நாடுகள் உள்நாட்டுப் போர்களில் ஈடுபட்டு வருகின்றன. மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் போர் நடைபெற்று வருகிறது.
இதில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், வட ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் அதிக உள்நாட்டுப் போர்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பார்த்தால், துருக்கி, சைப்ரஸ், சிரியா, லெபனான், ஈராக், ஈரான், இஸ்ரேல், மேற்குக் கரை, காசா பகுதி, ஜோர்டான், எகிப்து, சூடான், லிபியா ஆகிய நாடுகளில்தான் உள்நாட்டுப் போர்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய போர்களுக்குப் பின்னால் வல்லரசு நாடுகள் ஒளிந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. பொதுவாக, மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வளம் மிக்கவை. அவற்றை ஆக்கிரமிப்பதற்காகவே, சில வல்லரசு நாடுகளை இணைத்துக் கொண்டு, அமெரிக்கா அந்நாடுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது. உதவும் நோக்கில் அந்த நாடுகளின்மீது தன் கட்டுப்பாட்டைச் செலுத்தி வருகிறது.
மேலும், மத்திய கிழக்கின் பல மாநிலங்களில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை உள்ளது. லிபியா மற்றும் எகிப்து போன்ற அரபு-இஸ்ரேல் மோதல்கள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாடுகளுக்கு இடையே நடைபெறும் உள்நாட்டுப் போர் ஒருபுறம் இருக்க, மறுபுறம் எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதற்கான வேலைகளில் வல்லரசு நாடுகளின் ரகசியமும் அடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக, இந்நாடுகளின் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறும் போரால் உலகப் பொருளாதாரம் சிதைவுறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த போரில் மேற்கத்திய நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் வெவ்வேறு சார்பு நிலைகளை எடுத்துள்ளதால் போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பின்னணியில் ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தனர். தவிர, தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக ஹூதி போராளிகள் சர்வதேச கடல் வழிகளில் கொள்ளையடிப்பது, கப்பல்களை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளைக் கடந்து செல்லும் வணிகக் கப்பல்களைக் குறிவைத்து கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குகிறார்கள். இதுவரை 60க்கும் மேற்பட்ட டிரோன்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் வழிமறித்து அழித்துள்ளன. இதனால் இந்திய கடற்படை மத்திய மற்றும் வட அரபிக்கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் நீடிப்பதால் இந்தியாவுக்கு செங்கடல் வழியாக வரும் பெட்ரோலிய பொருட்கள் வருகையில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலகப் பொருளாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.