கனடாவில் மிரட்டல்விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதி: சொத்துக்களை பறிமுதல் செய்து NIA அதிரடி! யார் இவர்?

காலிஸ்தான் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பன்னூனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குர்பத்வந்த் சிங் பன்னூன்
குர்பத்வந்த் சிங் பன்னூன்ட்விட்டர்
Published on

கனடா - இந்தியா உறவில் விரிசல்!

கனடா - இந்தியா உறவு விரிசலுக்குப் பின் காலிஸ்தான் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பிரிவினைவாத பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்த கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம்சாட்டியதோடு இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இந்த விஷயத்தில் இந்தியாவோ அவர்களை (பிரிவினைவாதிகளை) எதிர்த்து நிற்கிறது. குறிப்பாக, பஞ்சாபை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்து காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

ஜஸ்டின் ட்ரூடோ, மோடி
ஜஸ்டின் ட்ரூடோ, மோடிட்விட்டர்

பயங்கரவாதி கரண்வீர் சிங்கிற்கு ரெட் கார்னர் நோட்டீஸ்!

இதனால்தான் இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் வெளியாகி மோதல் போக்கு தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சா எனப்படும் காலிஸ்தான் அமைப்பினைச் சேர்ந்த பயங்கரவாதி கரண்வீர் சிங் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளதால், அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி தேடி வருகிறது. கரண்வீர் சிங், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கலாம் என அரியானா மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் சொத்துக்கள் பறிமுதல்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், தேசிய புலனாய்வு அமைப்பு பஞ்சாபின் சண்டிகரில் தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பின் தலைவரும் காலிஸ்தானி பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னூனின் அமிர்தசரஸ் வீட்டில் அவருக்குச் சொந்தமான சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் அமிர்தசரஸ் மாவட்டத்தின் புறநகரில் அமைந்துள்ள அவரது பூர்வீக கிராமமான கான்கோட்டில் உள்ள 46 கனல் விவசாய நிலங்களும், சண்டிகரில் உள்ள செக்டார் 15சியில் உள்ள அவரது வீடும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில், இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள என்ஐஏ குற்றசாட்டப்படுபவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பன்னூன்

பன்னூன் மீது பஞ்சாபில் 3 தேசத்துரோக வழக்குகள் உட்பட 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த 2019 முதல் பஞ்சாப் தவிர, நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக, காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், NIA அமைப்பால் தேடப்பட்டு வருகிறார். 2021 பிப்ரவரி 3, என்ஐஏ நீதிமன்றத்தால் பன்னுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவர் 2022 நவம்பர் 29 சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும், NIAவின் கூற்றுப்படி, SFJ இணையவெளியை தவறாகப் பயன்படுத்தி இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மாற்றியதாகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட அவர்களைத் தூண்டியதாகவும் அதன் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலிஸ்தானிக் கொடியை ஏற்றுபவர்களுக்கு சன்மானம்!

மேலும் அவர், சமீபகாலமாக இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் NIA தெரிவித்துள்ளது. குறிப்பாக, ’காஷ்மீர் மக்களுக்காக, ஒரு முஸ்லீம் நாட்டை உருவாக்குங்கள்’ என அவர் தெரிவித்ததாகவும், அந்த நாட்டிற்கு 'உர்துஸ்தான் ஜனநாயக குடியரசு' எனப் பெயரிட விரும்புவதாகவும், மேலும் அவர் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரித்துச் செல்லும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்’ என ஆதாரங்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் NIA அறிக்கையின்படி, ‘குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்தியா கேட்டில் காலிஸ்தானிக் கொடியை ஏற்றுபவர்களுக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை சன்மானமாக வழங்குவதாகவும், பஞ்சாப், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் காலிஸ்தான் கொடிகளை ஏற்ற அவர் பல முறை முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கனடாவில் இந்தியர்களுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் அமைப்பு

சமீபத்தில்கூட, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையேயான மோதலில், கனடாவில் உள்ள மூத்த இந்திய தூதர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை அவர் அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ’கனடாவில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வெளியேறி இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை. காலிஸ்தான் தனிநாடு கோருகிறவர்கள் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள். ஆகையால் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள்’ எனவும் கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னூன்?

இந்தியாவின் பஞ்சாபில் அமிர்தசரஸின் புறநகரில் அமைந்துள்ள கான்கோட் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் குர்பத்வந்த் சிங் பன்னூன். இவருக்கு மக்வந்த் சிங் பன்னூன் என்ற சகோதரரும் உண்டு. அவர் தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. 1947ஆம் ஆண்டு பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து கான்கோட் கிராமத்திற்கு அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். குர்பத்வந்த் பன்னூனின் பெற்றோர் இறந்துவிட்டனர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற குர்பத்வந்த், சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று வாதிட்டதற்காக நாடு முழுவதும் அறியப்பட்டார்.

விபத்தில்  சிக்கினாரா குர்பத்வந்த் சிங் பன்னூன்?

சீக்கியர்களுக்கான நீதிக்கான (SFJ) சட்ட ஆலோசகராகவும் செய்தித் தொடர்பாளராகவும், சுதந்திர சீக்கிய நாடான காலிஸ்தான் என்ற கருத்தை மேம்படுத்துவதில் பங்கு வகித்தார். இத்தகைய நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அக்டோபர் 2022இல், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் குர்பத்வந்த் சிங் பன்னூனுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் இந்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது. தவிர, அவர் விபத்தில் சிக்கியதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், அது தொடர்பான வதந்திகளை பத்திரிகையாளர்கள் மறுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com