சமூக வலைதளங்களின் புரட்சி, இன்றைய தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. அதில் இடம்பெறும் பதிவுகள், வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றுக்கு பயனர்கள் லைக் போடுவர் அல்லது கருத்துகளைப் பதிவிடுவர். அதுபோன்ற ஒரு பதிவுக்கு பயனர் ஒருவர் லைக் போட்டதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் பலர் ரெட்டிட் (reddit) என்ற வலைதளத்தில் பயனாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய பணியிடங்களில் சந்திக்கும் சவால்கள், அனுபவங்கள், சூழல்களைப் பதிவு செய்துவருகின்றனர். அதற்கு இதர பயனர்கள் கருத்து தெரிவித்தும், லைக் போட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், மனநலம் சார்ந்த வேலை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முன்னாள் ஊழியர் ஒருவர், ரெட்டிட் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மோசமான பணி சூழல்கள் தொடர்பான லிங்க்டுஇன் (linkedin) பதிவை லைக் செய்த காரணத்திற்காக தன்னுடைய நிறுவனம் தன்னை பணியிலிருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளார்.
என்றாலும், இந்தப் பயனாளர் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களையோ அல்லது அவர் பணி செய்த நிறுவனத்தின் பெயரையோ வெளியிடவில்லை. லிங்க்டுஇன் தளத்தில் மோசமான பணி தொடர்பான ஒரு பதிவை லைக் செய்த ஒரே காரணத்திற்காக என்னுடைய முதலாளி வேலையைவிட்டு நீக்கி விட்டார் என அதில் பதிவிட்டுள்ள அவர், ”என்னுடைய தலைமைச் செயல் அதிகாரி மிக மோசமானவர். அவரது மோசமான செயல்முறைகளால்தான் அவ்வப்போது மனஅழுத்தத்திற்கு ஆளாகினேன். அதன் காரணமாகவே பல சமயங்களில் நான் அலுவலக ஓய்வறைக்குச் சென்று அழுதேன்.
மோசமான பணி கலாசாரம் தொடர்பான ஒரு லிங்க்டுஇன் பதிவை நான் லைக் செய்ததையே அவர் காரணமாக கூறி, எனக்கு எந்தவித எச்சரிக்கையையோ அல்லது நோட்டீஸையோ வழங்காமல் உடனடியாக பணியில் இருந்து நீக்கிவிட்டார்” என அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்தப் பதிவுக்கு பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ”இதுதான் கார்ப்பரேட் உலகின் உண்மை முகம்” என ஒரு பயனாளர் கூறியுள்ளார். மற்றொருவரோ, “நீங்கள் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் வெளிப்படையாகக் கூறலாம் என நம்மிடம் தெரிவிப்பார்கள்; ஆனால் நம் பிரச்னையை கூறும்போது நம்மை மனஅழுத்தத்திற்கு ஆளாக்க வேண்டும் என்றுதான் பார்ப்பார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: வரலாற்றில் முதல்முறை.. விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர்!