ஒற்றை பெற்றோராக (single parent) குழந்தையை வளர்ப்பது பெரிய சவாலாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், 50 வயதில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுப்பது அதைவிட பெரிய சவாலாக இருக்கும். ஆனால் லண்டனைச் சேர்ந்த 52 வயதான கெல்லி கிளார்க் அதனை சாத்தியமாக்கியிருக்கிறார்.
20 ஆண்டுகளாக விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த கிளார்க், இளமையாக இருக்கும் போதே குடும்ப வாழ்க்கையில் ஈடுபட விருப்பமில்லாமல், வானில் உயர பறக்கும் வேலையை தேர்வு செய்திருக்கிறார். ஆனால் கிளார்க்கிற்கு எப்போதுமே ஒரு குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அவருக்கு ஏற்ற பார்டனரை பல ஆண்டுகளாக தேடி வந்திருக்கிறார். ஆனால் அது அவருக்கு கிட்டாமலே போயிருக்கிறது.
இந்த நிலையில்தான் தன்னுடைய 50வது பிறந்தநாளின் போது முக்கியமான முடிவொன்றை எடுத்திருக்கிறார் கெல்லி கிளார்க். அதன்படி, சிங்கிள் மதராக இருக்க முடிவெடுத்த கிளார்க், ஐ.வி.எஃப் முறையில குழந்தை பெற்றெடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
அதற்காக கடந்த 2020ம் ஆண்டு கிளார்க் க்ரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸுக்கு சென்று ஸ்பெர்ம் டோனர் முறையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். அதன்படி 12 நாட்களுக்கு பிறகு கெல்லி கிளார்க் கருவுற்றிருக்கிறார். அதன்பிறகு கெல்லி கிளார்க்-க்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு லைலா ரே கிளார்க் என பெயரிட்டிருக்கிறார்.
இது குறித்து பேசியுள்ள கெல்லி கிளார்க், “இப்போ எனக்கு டிராவல் செய்யவோ, பார்ட்டி பண்ணவோ எந்த தேவையும் ஏற்படவில்லை. ஏனெனில், லைலா ரே-ஐ வளர்ப்பதிலேயே என்னுடைய முழு கவனத்தை செலுத்த இருக்கிறேன். 50 வயதில் குழந்தை பெற்றெடுப்பதில் எந்த தவறும் இல்லை. இனி என் குழந்தையோடு முழு நேரத்தையும் செலவிட இருக்கிறேன்.
என்னுடைய இளமை காலத்தில் இருந்ததை விட, லைலா ரேவை இப்போது சிறந்த முறையில் வழிநடத்திச் செல்லும் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்” என உணர்ச்சி பொங்க கூறியிருக்கிறார்.