ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் ஒரு மாதத்திற்கு முன்புதான் ஒரு தம்பதியால் அந்த உணவகம் திறக்கப்பட்டது. சுஜாத் அலி மற்றும் அவரது மனைவி ஆயிஷா அப்ரார் தொடங்கிய உணவகத்தில், மீதமாகும் உணவை தேவைப்படும் மக்களுக்குக் கொடுத்து மகிழ்கிறார்கள்.
இரவு பத்து மணிக்கு உணவகத்தை மூடும் அவர்கள், நள்ளிரவு வரையில் ஒரு கவுண்டரை திறந்து வைத்திருக்கிறார்கள். அங்கே உணவு தேவைப்படுவோர் இலவச உணவைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு சூடான உணவை பேக்கில் தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.
ஷார்ஜா நகரில் நேஷனல் பெயிண்ட்ஸ் நிறுவனத்திற்கு அருகில் பிரியாணி உணவகத்தை அந்த தம்பதிகள் தொடங்கினர். அங்குள்ள அலுவலகப் பணியாளர்களுக்கு குறைவான விலையில் நல்ல உணவை அளித்துவருகிறார்கள். இன்று அவர்கள் 8 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார்கள்.
ஒவ்வொரு உணவகமும் தினமும் மீதமாகும் கைப்படாத சுத்தமான உணவை அவர்களிடம் கொடுக்கிறார்கள். அதனை தேவைப்படும் மக்களுக்கு சுஜாத் அலி தம்பதி வழங்கி மகிழ்கிறார்கள்.
"பொதுவாக எந்த தொழிலாக இருந்தாலும், 60 முதல் 70 சதவீதம் லாபம் கிடைக்கும். அனைத்து வகை மக்களுக்கும் உணவை வழங்குவதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கிறது" என்கிறார் சுஜாத் அலி.