இரு கால்கள் இல்லாத அப்துல் இன்று ஒரு தன்னம்பிக்கை மனிதராக உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
சின்னச் சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் துவண்டு விழும் எத்தனையோ பேரை நாம் கண்கூட காண்கிறோம். தேர்வில் தோல்வி என்பதால் தற்கொலை, கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை, இன்னும் எத்தனை? எத்தனை? சம்பவங்கள். தன்னம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் எந்தப் பிரச்னையையும் நாம் வென்று விடலாம் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளும் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கின்றன. ஒருவர் இரண்டு கால்கள் இல்லை என்றாலும் தன்னம்பிக்கை மனிதராக வலம் வருகிறார். அவர்தான் அக்ரம் அப்துல் அல்-சாபி.
ஏமன் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் அக்ரம் அப்துல் அல்-சாபி. தன் தாய் நாட்டிற்காக பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று பல விருதுகளை வாங்கி குவித்தவர். பதக்கங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தவர் வாழ்க்கையில் விபத்து குறிக்கிட்டு வேறு கதை எழுதியது. தனது 28வது வயதில் கார் விபத்தில் சிக்கிய அக்ரம் அப்துல் இரண்டு கால்களையும் இழந்தார். எடைகளை தூக்கி வாழ்க்கையை வாழ்ந்த அக்ரம், கால்கள் இல்லாத நிலையில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார்.
சாதிக்கப் பிறந்தவர்களை மரணம் நெருங்க பயப்படுகிறது என்பது போல தனது நண்பர்கள், சுற்றத்தார்களின் உதவியால் உயிர் பிழைத்த அக்ரம், இன்று மீண்டும் தனது கைகளில் பளுவை தூக்க தொடங்கியிருக்கிறார். நீச்சல் குளத்தில் துள்ளிக்குதித்து நீச்சல் அடிக்கிறார். உடற்பயிற்சி செய்கிறார். தனக்கென தயாரிக்கப்பட்ட ஸ்க்கேட்டிங் சக்கரத்தில் விரும்பும் இடத்திற்கு செல்கிறார். அன்றாட தேவைக்காக தினமும் கார் கழுவும் தொழிலை செய்துகொண்டிருக்கும் அக்ரமின் மனதில் உறுதி பல மடங்காகியுள்ளது.
சரியான நிதி உதவி கிடைத்தால் நான் மீண்டும் நாட்டிற்காக பளு தூக்குவேன் என்று மன உறுதியுடன் ஓடிக் கொண்டிருக்கிறார். ஆம் ஓடிக் கொண்டிருக்கிறார், தன்னம்பிக்கை நாயகன் அக்ரம் அப்துல் அல்-சாபி.