ஒரு புறா 14 கோடி ரூபாய்... ஐபிஎல்லை விஞ்சும் சீனர்களின் ஏலம்!

ஒரு புறா 14 கோடி ரூபாய்... ஐபிஎல்லை விஞ்சும் சீனர்களின் ஏலம்!
ஒரு புறா 14 கோடி ரூபாய்... ஐபிஎல்லை விஞ்சும் சீனர்களின் ஏலம்!
Published on

ஒரே ஒரு புறாவை ரூ.14 கோடிகளை கொட்டி ஏலம் எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார் சீனர் ஒருவர்


ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை கோடி கணக்கில் கொட்டி அணி நிர்வாகம் ஏலம் எடுத்ததை பார்த்திருக்கிறோம். இப்போது அதைப்போன்ற ஒரு ஏலம் கோடிகளை கொட்டி புறாவுக்காக நடத்தப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த ஏலம் நடந்தது பெல்ஜியத்தில். பெல்ஜியத்தில் புறா வளர்ப்பு பிரபலமான தொழிலாக வளர்ந்து வருகிறது. இந்த புறாக்கள் பந்தயத்துக்காகவே வளர்க்கப்படுகின்றன. இதனால் புறா பந்தயம் கட்டும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும், பெல்ஜியம் வந்து புறாக்களை வாங்கிச்செல்வது வழக்கம். அதிலும், புறாக்கள் ஏற்கனவே பந்தயத்தில் வெற்றிபெற்றிருந்தால் அதற்கான மவுசே தனி. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது.


நேற்று பெல்ஜியத்தில் நியூ கிம் என்கிற, இரண்டு வருட பெண் புறாவுக்கான ஏலம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை, வெறும் 200 யூரோ, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17,600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிலர் இந்த புறாவை 13.1 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் கேட்டனர். ஏலம் முடிய அரை மணிநேரம் இருந்த நிலையில், சீனாவைச் சேர்ந்தவர் ஒருவர் கிம் புறாவை 16 லட்சம் யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் 14.2 கோடி ரூபாய்) ஏலம் கேட்டு வாயடைக்க வைத்தார்.


இந்த கிம் புறா 2018ல் குறுகிய தூர பந்தய போட்டிகள் உட்பட பல்வேறு தேசிய அளவிலான பந்தயங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தற்போது இந்த புறா ஓய்வு பெற்று விட்டது. அப்படி இருந்தும் இவ்வளவு தொகைக்கு ஏன் ஏலம் எடுத்திருக்கிறார்கள் என்றால் அது பெண் புறா என்பதனால் தான். பந்தய புறாக்கள், அவற்றின் பத்தாவது வயது வரை குஞ்சுகளைப் பொறிக்க முடியும். இதனால் கிம் புறா மூலம் அந்த இனத்தை பெருக்க, புதிய உரிமையாளர் திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக, பந்தய புறாக்களில் பெண் புறாக்களை விட, ஆண் புறாக்களுக்கே மதிப்பு அதிகம். காரணம் ஆண் புறாக்கள் அதிக சந்ததிகளை உருவாக்கும் என்பதால்தான். அதனால் தான் கிம் புறா இவ்வளவு விலைக்கு ஏலம் போனதால் ஆச்சர்யப்பட்டு போய் கிடக்கிறார்கள் அதன் உரிமையாளரும், ஏல நிர்வாகிகளும்!


விலையை ஏற்றிய சீனர்கள்!


கிம் புறாவை போட்டிபோட்டு கொண்டு இரண்டு சீனர்கள் ஏலம் கேட்டுள்ளனர். இரண்டுபேரும் பணக்காரர்கள் எனக் கூறப்படுகிறது. அதனால் தான் இவ்வளவு பெரிய விலைக்கு புறா ஏலம் போயுள்ளது. இந்த சீனர்களின் போட்டிக்கு சீனாவின் நடத்தப்படும் புறா பந்தயங்களே காரணம். மற்ற நாடுகளை காட்டிலும், சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக புறா பந்தயங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக தான் புறாக்கள் ஏலம் அங்கும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து புறாக்களை வாங்குவதிலும் சீனர்கள் ஆர்வம் கொண்டு உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com