திடீரென சுருண்ட 80 வயது விமானி.. சாமர்த்தியமாக எல்லோரையும் காப்பாற்றிய 68 வயது பெண் பயணி!

அமெரிக்காவில் சிறிய ரக விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பயணி ஒருவர் விமானத்தை சிறிய விபத்துடன் தரையிறக்கினார்.
Piper Meridian Turbo Prop
Piper Meridian Turbo PropTwitter
Published on

கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் நியூயார்க் அருகிலுள்ள வெஸ்ட்செஸ்டர் பகுதியிலிருந்து 6 இருக்கைகள் மட்டுமே கொண்ட Piper Meridian Turbo Pro என்ற சிறியரக விமானம் மசாசூசெட்ஸ் பகுதியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிய 80 வயதான விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செயலற்று கிடந்துள்ளார். இதனையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த 68 வயது பெண் பயணி ஒருவர் விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

இதில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் தொலைத்தொடர்பில் இணைந்துள்ளார் அப்பெண் பயணி. தொடர்ந்து அவர்களுடன் இணைப்பில் இருந்த அவர், அவர்கள் கூறுவதை கேட்டு விமானத்தை மசாசூசெட்ஸின் வெஸ்ட் டிஸ்பரியில் உள்ள மார்தா வைன்யார்ட் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறக்க முயன்றார். அப்போது விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சென்றதால் விமானத்தின் இடது பக்க இறக்கை தடுப்புச்சுவர் மீது மோதி பாதியாக உடைந்தது. அத்துடன் விமானம் தரையிறங்கி நின்றது. இதில் அந்த பெண் பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் இதனால் காயம் ஏற்படவில்லை. அங்கு காத்திருந்த அதிகாரிகள் பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கினர். அத்துடன் உடல்நலக்குறைவு ஏற்பட்ட விமானியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு போஸ்டன் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆபத்தான நேரத்தில் தானாக முன்வந்து உதவிய பெண் பயணிக்கு சக பயணிகளும், ஊழியர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விமான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com