உலகளவில் முக்கியமான மதிப்புமிகுந்த வங்கிகள் என்று கருதப்படும் 30 நிதி நிறுவனங்களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியும் ஒன்று. இவ்வங்கியின் பங்குகள் மதிப்பு மீண்டும் சரியத் தொடங்கியதை அடுத்து, பணப்புழக்க பிரச்சினையில் சிக்கியது. இதைச் சமாளிக்கும்விதமாக சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank-இல் இருந்து 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் (54 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான தொகையை கடனாகப் பெற்றது.
இதை திருப்பித் தர முடியாத நிலையில், கிரெடிட் சூயிஸை போட்டி நிறுவனமான UBS வாங்க வேண்டும் என்று சுவிஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். அதன்படி, கிரெடிட் சூயிஸ் வங்கியை UBS கைப்பற்றியது. சூயிஸ் வங்கியை UBS கைப்பற்றியதைத் தொடர்ந்து அது, சில அதிரடி முடிவுகளை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. அதன்படி, முதற்கட்டமாக வருடாந்திர செலவுத்தொகையான $8 பில்லியனைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், 9,000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து, கிரெடிட் சூயிஸ்க்கு, நிர்வாகத்தின் முதல் மூன்று நிலைகளுக்கான அனைத்து நிலுவையில் உள்ள போனஸ் கொடுப்பனவுகளையும் ரத்து செய்யவும் அல்லது குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. சுவிஸ் வங்கிச் சட்டத்தின் கீழ், ஃபெடரல் கவுன்சில், ஃபெடரல் நிதியிலிருந்து மாநில உதவியைப் பெற்றால், முறையாக முக்கியமான வங்கி மீது போனஸ் தொடர்பான நடவடிக்கைகளை விதிக்க முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இதனால், சுமார் 1,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கைகளால் சுமார் 50-60 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் நஷ்டமாகும் எனவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த வங்கியின் வருடாந்திர பொதுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பலரும் விரக்தியை வெளிப்படுத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. குறிப்பாக, இதில் கலந்துகொண்ட முன்னாள் ஊழியர் ஒருவர், ”இனி, சுவிஸ் வங்கிகளில் பணம் சேமிப்பது பாதுகாப்பானது அல்ல. இந்த தவறுக்குக் காரணம், வங்கி மற்றும் அதன் வாரியமுமே ஆகும்.
தவிர, இந்த தவறு நடந்ததற்காக தானும் வெட்கப்படுகிறேன். இதற்கு தானும் ஒருவகையில் பொறுப்பு” என உணர்ச்சிபொங்க அவர் பேச, எல்லோரும் கைதட்டினர். அவர் பேசியதற்குப் பிறகு, கிரெடிட் சூயிஸ் குழுமத்தின் தலைவரான Axel Lehmann, வங்கி வீழ்ச்சி அடைந்ததற்காக மன்னிப்பு கோரினார்.